​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாய்கள் ஜாக்கிரதை..! 3 பேரை கடித்து குதறியது..! ரேபிஸ் பயங்கரம்

Published : May 10, 2019 7:04 AM

நாய்கள் ஜாக்கிரதை..! 3 பேரை கடித்து குதறியது..! ரேபிஸ் பயங்கரம்

May 10, 2019 7:04 AM

சேலம் அடுத்த ஓமலூரில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று ரேபிஸ் தாக்குதலுக்குள்ளாகி சாலையில் நடந்து சென்றோரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. விரட்டிய நாயிடம் தப்பியவர்கள் நாயை கல்லால் அடித்து கொன்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேல் காமாண்டப்பட்டியைச் சேர்ந்த சிவகாமி என்பவர், தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாயை இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் இது சிவகாமிக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த அந்த நாய் இடைவிடாமல் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. அதன் வாயில் இருந்து உமிழ்நீர் வடிந்து கொண்டே இருந்ததுடன், நாய் கட்டிப் போடப்பட்டு இருந்த இடத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து சிவகாமி ஒரு வேளை நாயை அவிழ்த்து விட்டால் சரியாகி விடும் என்று எண்ணி அவிழ்த்து விட்டுள்ளார்.

அப்போது குரைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடிய நாய், சாலையில் நடந்து சென்றவர்களை வெறி கொண்டு விரட்டியது. இதில் சாலையில் செல்வோர் எல்லாம் தெரித்து ஓடினர். வெறி கொண்ட அந்த நாய் மூன்று பேரைக் கடித்துக் குதறியது.

இதையடுத்து கையில் கற்களையும், உருட்டு கட்டைகளையும் வைத்துக் கொண்டு நாயை விரட்டி விரட்டி தாக்கிய பொதுமக்கள் அதனை அடித்தே கொன்றனர்.

நாய்கடியால் அவதிப்பட்ட குழந்தைவேல், சக்திவேல் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் குன்னூர் வெறிநாய் கடி ஆராய்ச்சி மைய மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த நாய் ரேபிஸ் தாக்குதலுக்குள்ளானதால் வெறிப்பிடித்து காண்போரை எல்லாம் கடித்து குதறியது ஆய்வில் தெரியவந்தது.

நாயின் குணத்தில் மாற்றம் ஏற்பட்டால், கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பு சிகிச்சை அளித்திருந்தால் இப்படி ஒரு விபரீதத்தை தவிர்த்து இருக்கலாம் என்று கூறும் மருத்துவர்கள் வீடுகளில் நாய் வளர்போர் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் வீட்டு நாயை கடித்து வைத்த ரேபிஸ் தாக்கிய தெரு நாயை தேடிவருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.