​​ மே 6ல் NEET நுழைவுத் தேர்வு – CBSE அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மே 6ல் NEET நுழைவுத் தேர்வு – CBSE அறிவிப்பு

மே 6ல் NEET நுழைவுத் தேர்வு – CBSE அறிவிப்பு

Feb 09, 2018 11:21 AM

நீட் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் மற்றும் திறந்த நிலை பள்ளியில் படித்தோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டாக வரும் மே மாதம் 6ம் தேதி நடக்கவிருக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 பிளஸ் 2 என்ற முறையில் மேல்நிலைக் கல்வி தேர்ச்சியடைந்தவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

நடப்பு ஆண்டில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும், நீட் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். திறந்த நிலை கல்வி நிலையங்களில் பயின்றோர் மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 எழுதியோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான குறிப்பாணை வெளியானதும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால் இந்த இணையதளம் முடங்கியது. மாணவர்கள் பதற்றமின்றி பொறுமையாக விண்ணப்பிக்குமாறு சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 9ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை வங்கிக்கணக்கில் செலுத்த மார்ச் 10ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேரத்திலும் இதே போன்று லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்க முனைவார்கள் என்பதால் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்குமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.