​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், 40 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

Published : May 07, 2019 7:13 PM

மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில், 40 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை

May 07, 2019 7:13 PM

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் 40 நாட்களாகியும், அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

சென்னை தா.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் தனது தங்கை மேரி உதவியுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவில் மனு ஒன்றினை அளித்தார். அடிபட்டு வீங்கிய கையுடன், பார்வையற்ற கண்களில் கண்ணீருடன் நின்ற அவரது நிலை பார்ப்போர் மனதை பிசைந்தது.

அந்தோணியை போன்று அவரது மனைவி மேரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிப்பாட்டு தளங்களில் இருவரும் பாடல்களை பாடி யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஞாயிற்று கிழமை அந்தோனியின் மனைவி மேரிக்கு உடல் நிலை சரியில்லாததால், இவர் மட்டும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு பாட்டு பாடி யாசகம் பெறுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது சாலையோரமாக நின்றிருந்த அந்தோனி மீது மாநகர பேருந்து ஒன்று மோதியுள்ளது.பேருந்து மோதியதில் வலது கையில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து உள்ளார்.

இந்த விபத்து நடந்த போது, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து விசாரணை நடத்தியதோடு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு தங்கள் பணியை முடித்துக் கொண்டனர்.

விபத்து நடந்து 40 நாட்களாகியும் இது வரை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

விபத்து நடந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெறும் வகையில் விபத்து தொடர்பான உரிய ஆவணங்களை வழங்க வேண்டும். இது குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவை தொடர்பு கொண்ட போது, மாநகர பேருந்து அடையாளம் தெரியாததால் வழக்கு பதியவில்லை என்று அவர்கள் அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாட்டு பாடி தனது யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய அந்தோணிக்கு, இன்று கை செயல்படாததால் அவருக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர போலீசார் உதவ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.