​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ தொழிற்சங்கமா? தொழிலை கெடுக்கும் சங்கமா? சமூக வலைதளத்தில் கண்டனம்

Published : May 02, 2019 6:26 AM

மெட்ரோ தொழிற்சங்கமா? தொழிலை கெடுக்கும் சங்கமா? சமூக வலைதளத்தில் கண்டனம்

May 02, 2019 6:26 AM

சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை முடக்கி, பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் உரிய வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்! ஆனால், அரசுத் துறை சார்ந்த வேலையில் சேர்ந்து விட்டால் போதும், அந்த வேலையை சரிவர செய்யாமல், உரிமைக்கு குரல் கொடுப்பதாக கூறி முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை சில சங்கங்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாக வேலையில்லா பட்டதாரிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாள்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனகுரல்கள் எழுந்துள்ளன.

சென்னை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மெட்ரோ ரெயில் சேவை..! கட்டணம் அதிகம் என்பதாலும், ஆரம்பத்தில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை மட்டுமே ரெயில் சேவை என்பதாலும் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கவில்லை.

3 வருடங்கள் கடந்த நிலையில் முதல்கட்ட மெட்ரோ வழித்தடம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால் அதிக பயணிகள் தினமும் இந்த ரெயில் சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில்தான் திடீர் வேலை நிறுத்தம் நடத்தி, மெட்ரோ ரெயிலை நம்பியுள்ள பயணிகளை கடந்த 3 மூன்று நாட்களாக நடுவழியில் தவிக்க விட்டுள்ளனர் சிஐடியூ மெட்ரோ ரெயில் ஊழியர் சங்கத்தினர்...!

கடந்த 2017 டிசம்பரில் இந்த தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் மெட்ரோ நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே உரசல்கள் எழுந்ததாகக் கூறப்பட்டாலும், ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவேண்டி ஆரம்பகட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் தொழிற்சங்கத்தினர்.

எந்த ஒரு ஊழியர் பிரச்சனையையும், தொழிற்சங்கத்தின் வாயிலாகவே அணுக தொடங்கியதின் விளைவுதான் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட முன்னறிவிப்பில்லா வேலைநிறுத்தப் போராட்டம் என்று சுட்டிக்காட்டுகிறது மெட்ரோ ரெயில் நிர்வாகம்.

பணிக்கு முறையாக வராத ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததற்கும், ரெயில் சிக்னல்களை செயல் இழக்கச்செய்து ரெயில் சேவையை பாதிப்படைய செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்தும் தொழிற்சங்கம் வரிந்துகட்டிக் கொண்டு போராட்டத்தில் குதித்தால் எப்படி மெட்ரோ ரெயில் சேவையை சிறப்பாக நடத்த இயலும் ? என்பது நிர்வாகத்தின் ஆதங்கமாக உள்ளது.

அதே நேரத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகம், தற்காலிக ஊழியர்களுக்கு, தங்களை விட அதிக சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துவதாலும், தங்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லை என்பதாலும் தாங்கள் சிஐடியூ தொழிற்சங்கத்தின் வாயிலாக போராட்டத்தை முன்னெடுப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கத்தினரின் நியாயமான போராட்டங்கள் வரவேற்கதக்கது. அதே நேரத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனமான மெட்ரோ ரெயிலில் எதிர்பர்த்த வருவாய் கிடைக்காவிட்டாலும், ஊழியர்களுக்கு எந்த ஒரு நிலுவையும் இன்றி மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நிர்வாகத்தை பிளாக் மெயில் செய்வதற்கு ஒப்பானது என்கின்றனர் சமூக வலைதளவாசிகள்.

மெட்ரோ ரெயில் ஊழியர்களின் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாபஸ்பெறபட்டாலும், இதுபோன்று வருங்காலத்தில் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை தவிப்புக்குள்ளாக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் சிலர் நடத்திய போராட்டங்களால், நன்கு இயங்கி வந்த பல தொழிற்சாலைகள் நலிந்துபோய் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பின்னுக்குத் தள்ளப்பட்டது! அந்த வரலாறு திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஊழியர்களின் கைகளில்தான் உள்ளது..!