​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒடிசாவை அச்சுறுத்தும் ஃபானி

Published : May 01, 2019 4:17 PM

ஒடிசாவை அச்சுறுத்தும் ஃபானி

May 01, 2019 4:17 PM

தி தீவிர புயலான ஃபானி, மே 3 ஆம் தேதி கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின் பல மாவட்டங்கள் சேதங்களைச் சந்திக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஒடிசாவின் பூரியில் இருந்து தெற்கு - தென் மேற்கே, 680 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு மத்தி மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் அது, மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு - வடகிழக்கு திசைக்கு மாறும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை மறுநாள் பிற்பகலில் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் சாந்த்பலி இடையே ஃபானி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவின் கஞ்ஜம், கஜபதி, குர்தா, பூரி மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் சேதம் ஏற்படக் கூடும் என்றும் எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திராவில் சில மாவட்டங்களும் புயல் தாக்குதலுக்குள்ளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபானி புயல் ஒடிசாவை நெருங்குவதால் அங்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மோசமான வானிலை என்பதைக் குறிக்கும் வகையில் ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் பேர் வரை தங்கும் வகையில் 879 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சேதத்தை தவிர்ப்பதற்காக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களில் வசிப்போர், வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படை, கப்பற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடையே ஒடிசாவில் தேர்தலை தள்ளி வைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியக் கடற்படை வீரர்கள் தயாராக உள்ளனர். போதிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ மற்றும் நீச்சல் வீரர்களுடன் கப்பல்கள் புறப்பட உள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கவும், உணவுப் பொட்டலங்களை வழங்கவும், ஐ.என்.எஸ். தேகா (INS Dega and INS Rajali) ஐ.என்.எஸ். ராஜாலி ஆகிய இரு கடற்படைத் தளங்களில், விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஃபானி புயல் நெருங்கும் வேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில் குடிசை வீடுகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வழிபாட்டுத் தலமான பூரியில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.