​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது

Published : May 01, 2019 2:56 PM



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது

May 01, 2019 2:56 PM

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பணிபுரியும் 4 ஆசிரியர்கள், 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு ஆசிரியர்கள் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவர்களின் பதிலை பெற்று அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணிக்காக காத்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தேர்ச்சி பெறாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.

மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாதத்திற்கான அவர்களின் ஊதியத்தை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.