​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர்

Published : Apr 20, 2019 9:30 PM

கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்ட ஜெட்ஏர்வேஸ் நிறுவனர்

Apr 20, 2019 9:30 PM

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும், எந்த வித நெருக்கடியும் இல்லாமல்  அதன் நிறுவனர் நரேஷ் கோயல் உள்ளார். கடன் சுமையை சமாளிக்கும் பொறுப்பில் இருந்து அவர் தப்பிக் கொண்டது குறித்து  விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு விட்டது. 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் எந்த நெருக்கடியும் இன்றி இருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நரேஷ் கோயல் தொடங்கினார். அப்போது அவர் வசம் 60 சதவீத பங்குகளும், கல்ப் ஏர், குவைத் ஏர்வேஸ் என்ற இரு வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் தலா 20 சதவீத பங்குகளும் இருந்தன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படும் என்று அப்போது மத்திய அரசு கொள்கையில் மாற்றம் செய்ததை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நரேஷ் கோயல்..

1996 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, டாடா குழுமம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் தடம் பதிக்க திட்டமிட்டது. ஆனால் டாடா குழுமம் வந்து விட்டால் போட்டி ஏற்படும் என்று கருதிய நரேஷ்கோயல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசின் அன்னிய முதலீட்டுக் கொள்கையை மாற்றி அமைத்தார். இதனால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் வெளிநாட்டு முதலீடு தடுக்கப்பட்டதால், டாடாவின் திட்டம் பலிக்காமல் போனது. இதனால் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுள்ள கோயலுக்கும் சிறிதளவு சிரமம் ஏற்பட்ட போதும் பெரிய போட்டி தவிர்க்கப்பட்டது.

அதே போன்று நாடு முழுவதும் 1998 ஆம் ஆண்டு 80 இருக்கைகளுக்கு குறைவான விமானங்களுக்கு, விமான நிலையங்களில் விமானம் நிறுத்துவதற்கான கட்டணம் மற்றும் இறங்குவதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சலுகையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியது.

2012 ஆம் ஆண்டு நிலைமை மீண்டும் மாறியது. உள்நாட்டு போக்குவரத்து துறையில் 49 சதவீதம் வரை அன்னிய முதலீட்டுக்கு மத்திய அனுமதி அளித்தது. இந்த கொள்கையை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்திருந்தால் விஜய் மல்லையாவின் கிங் பிஷ்ஷர் ஏர்லைன் நிறுவனம் மூடப்பட்டிருக்காது.

2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால், 2012 ஆம் ஆண்டு இழுத்து மூடப்பட்டது. இப்போதும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார் நரேஷ் கோயல். அபுதாபியை சேர்ந்த எடிஹட் விமான நிறுவனம், ஜெட் ஏர்வேசில் சுமார் 40 கோடி டாலர் முதலீடு செய்து, 24 சதவீத பங்குகளை வாங்கியது. இந்த முதலீடு நரேஷ் கோயலுக்கு பெரிதும் உதவியது.

வெளிநாட்டுக்கு விமானங்களை இயக்குவதில் மத்திய அரசு 2004 ஆம் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஒரு விமான நிறுவனம், வெளிநாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 20 விமானங்களை வைத்திருப்பதுடன், 5 ஆண்டுகள் துறை ரீதியாக அனுபவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடிவாளம் இடுவதாக அமைந்தது. ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சாதகமாக மாறியது. 2005 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடுகளுக்கு சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்கியது.

மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான கட்டணம் அதிகமாகவே இருந்தது. அதே போன்று ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகமாகவே வழங்கப்பட்டது. விமானங்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. அனைத்து சேவைகளுக்கும் அதிக தொகையை ஜெட் ஏர்வேஸ் கொடுத்தது. டிக்கெட் விற்பனையும் மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருந்தது. இதற்கான கமிஷன் தொகையும் ஜெட் ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற நரேஷ் கோயலின் நிறுவனத்திற்கே கிடைத்தது.

ஏறத்தாழ 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மற்றும் நிலுவைத் தொகை ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் தலையில் இருந்தது. இந்த நிலையிலும் அவர் பக்கமே அதிர்ஷ்ட காற்று வீசியது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் கையில் எடுத்துள்ளன. நிர்வாக குழு தலைவர் பொறுப்பில் இருந்தும் கோயல் விலகி விட்டார். கடனை தீர்ப்பது மற்றும் புதிய முதலீட்டாளரை கண்டு பிடிப்பது போன்ற பொறுப்புகள் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் உள்ளிட்டோரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது நரேஷ் கோயல் விருப்பப்பட்டால், லண்டனுக்கோ, துபாய்க்கோ சென்று நேரத்தை செலவிடலாம். எந்த நெருக்கடியும் அவருக்கு இல்லை. யாரும் அவரை தலைமறைவு குற்றவாளி என்று வசைபாடப் போவதில்லை. சவுகரியமான வாழ்க்கையை அவர் தொடரலாம். நேரடியாக அவர் தலையில் எந்த கடன் சுமையும் இல்லை. பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு நடப்பவற்றை வேடிக்கை பார்க்க முடியும். விஜய்மல்லையா போன்றவர்கள் நரேஷ் கோயலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நிதர்சமான உண்மை....