​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
IPL போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

Published : Apr 11, 2018 2:44 PM

IPL போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

Apr 11, 2018 2:44 PM

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, 5 காவலர்கள் தாக்கப்பட்டனர். அவர்களைத் தாக்கிய புகாரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு அமைப்பினர், சென்னை சேப்பாக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பலத்த சோதனைக்குப் பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், கடும் சோதனைகளையும் மீறி, கட்சிக் கொடியுடன் அரங்குக்கு சென்ற நாம் தமிழர் கட்சியினர், திடீரென கிரிக்கெட் வீரர்களை நோக்கி காலணி மற்றும் சட்டைகளை வீசியதுடன், நாம் தமிழர் கட்சியின் கொடியையும் ஏந்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

image

அதேபோல், அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி, பல்வேறுஅமைப்பினர் பேரணியாக வந்தனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடையை அணிந்து சென்ற ரசிகர்களை அடித்து, உதைத்த அவர்கள், அந்த மஞ்சள் நிற உடைகளை கழற்ற வைத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் உடை அணிந்து கார்களில் வந்தவர்களையும் போராட்டக்காரர்கள் மறித்து, அந்த உடைகளை கழற்றி வீசினர்.

தொடர்ந்து முன்னேறிய போராட்டக்காரர்களை போலீசார் தடுக்க முயற்சித்தனர். அப்போது, அவர்களை போராட்டக்காரர்கள், கைகளால் தாக்கினர்.

இந்த தாக்குதலில், பல்லாவரம் சங்கர் நகர் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் செந்தில்குமாரின் உதட்டில் காயம் ஏற்பட்டதுடன், 3 பற்களும் உடைந்து விழுந்தன. செந்தில்குமாரை தாக்கியவர்களை தடுக்க முயன்ற லியோன் ராஜசெல்வம் என்ற காவலரையும், மற்றொரு காவலரையும் போராட்டக்காரர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, காவலர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், பிரதீப், தனசேகர், நந்தகுமார், கார்த்திக், சரத்குமார், மணிகண்டன் ஆகியோரையும், அம்பத்தூரைச் சேர்ந்த ஜெரால்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜீவராஜ் என்ற காவலருக்கு இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதுடன், முத்துப்பாண்டியன் என்ற சிறப்பு அதிரடிப்படைக் காவலருக்கு வலது தோள்பட்டை இறங்கிவிட்டது.

இதையடுத்து, சேப்பாக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் சீமான், கவிஞர் வைரமுத்து, எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, இயக்குநர் அமீர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் மீது, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.