​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம்

Published : Apr 13, 2019 9:55 AM

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம்

Apr 13, 2019 9:55 AM

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சார்பில் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ராமதாஸ் உள்ளிட்டோரின் படங்களும் பிரச்சார வாசகங்களும் மாறி மாறி ஒளிரும் வகையிலான டிஜிட்டல் சாதனங்களை தொண்டர்கள் முதுகில் அணிந்து கொண்டு பல்வேறு இடங்களில் சுற்றி வந்தனர். சைக்கிளுடன் சேர்த்துக் கட்டப்பட்ட டிஜிட்டல் போர்டுகளைக் கொண்டும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தாம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார். நாட்டில் 6 கோடி இளைஞர்களுக்கு வேலை இல்லை என்றும் ஒன்றரை கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், படிப்புக்காக கடன் பெற்றவர்கள் வராக் கடனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வங்கிகளால் விரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.

கரூர்:

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள குரும்பப்பட்டி, ஆண்டிபட்டி, பாகாநத்தம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் ஆட்சி காலத்தில், ராஜிவ் காந்தியின் ஆதரவால் தான் அந்த சமயத்தில் கரூர் தொகுதியில் போட்டியிட தம்பிதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் எபினேசர்,  பத்மநாபபுரம், தக்கலை, முட்டைகாடு, சித்திரம்கோடு  பகுதிகளில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.  

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயன்றீன், விளவங்கோடு தொகுதிக்கு உட்பட நட்டாலம், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது, தண்ணீர் பிடிக்க குடத்துடன் சென்ற பெண்ணிடம் அவர் வாக்கு கேட்டார். யார் வெற்றிபெற்றாலும் பணக்காரர்களுக்குதான்  பலன் கிடைக்கும் என அந்த பெண் கூறினார். இந்நிலையில், இலவச குடிநீர், மருத்துவம், கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பெண்ணிடம் வேட்பாளர்  வாக்குறுதி அளித்தார்.  

மத்திய சென்னை:

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசரை ஆதரித்து சென்னை சேப்பாக்கத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு முன் நடிகர் சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் அரசியலில் ஈடுபட தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தான் பிரச்சாரத்திற்கு வருவது குறித்து நடிகர் சங்கத்தில் கடிதம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

சென்னை:

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் இசக்கிசுப்பயையா சென்னை தியாகராயநகரில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்குச் சேகரித்தார். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர் தியாகராயநகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் வழியாக சென்ற போது வாகனத்தை நிறுத்தி மைதானத்திற்குள் சென்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது அவரும் கிரிக்கெட் விளையாடினார். யார் சிறந்தவர் என கருதுகிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற அவர், தனக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்போவதில்லை என்றார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் திருவான்மியூரில் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். திருவான்மியூர் கடற்கரை அருகில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்த அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, பிரச்சாரத்திற்கு மேளம் அடிப்பவர்களுக்கும் அ.தி.மு.க.வினர் சிலருக்கும் வாக்குவாதமும் அடிதடி சூழலும் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், நெசப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்டணி கட்சியினருடன் பரப்புரை மேற்கொண்டார். 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாகை:

நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு, வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். முன்னதாக, ஆலங்குடி பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார்.

நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணனை ஆதரித்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தண்டலை, மேப்பாடி,சிங்களாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

கோவை:

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், கோவை, துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை, திப்பனூர், தாளியூர், நஞ்சுண்டாபுரம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, பன்னிமடை என்ற ஊரின் பெயரை பன்னீர்மடை என பெயர் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுடன் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி. பி.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நடிகை கோவை சரளா கவுண்டம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இதுவரை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குறுதிகள் என்ற பெயரில் காகிதத்தை தந்து சென்றதாக கூறினார்.

திண்டுக்கல்:

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள பண்ணப்பட்டியில் வாக்கு சேகரித்தார். அப்போது, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக தம்பிதுரையிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

விருதுநகர்:

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் முனியசாமி சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சுந்தர்ராஜ் ஆகியோர ஆதரித்து சாத்தூரில் கமல் பிரச்சாரம் மேற்கொண்டார்.ஆபத்தும், மாசும் விளைவிக்காத பசுமை பட்டாசு தயாரிக்க என்ன வழி என விஞ்ஞானிகளுடன் கலந்து பேசி வருவதாக அவர் தெரிவித்தார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் தமிழகம் முன்னேறி விடுமா என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் காரைக்காலில் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கொடியுடன் சிறுவர்கள் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு சிறுவர்களை பயன்படுத்த கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில், இதை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மக்களவை தொகுதி வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து, அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட குள்ள நாயக்கன்பாளையம், கள்ளங்காட்டு வலசு, சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பிற்காக ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்றும், அதற்காக பிரதமர் மோடிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறனுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர் ஈரோட்டில் ஆஞ்சநேயர் வேடம் அணிந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து, ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் மோடி ஆட்சி அமையும்போது, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

திருச்சி:

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி,
திருச்சி மாவட்டம், லால்குடி சுற்றுவட்டார பகுதியான பம்பரன்சுற்றி, கீழவாளாடி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம்:

சேலம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கொங்கணாபுரத்தை அடுத்த கட்சுப்பள்ளி, பள்ளிப்பட்டி, எட்டிக்குட்டைமேடு, பாச்சாலியூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார்.

திருப்பூர்:

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்திரகுமார், நஞ்சகவுண்டன் பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி, அதிலிருந்த குப்பைகளை அகற்றினார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எம்.ராஜசேகரன் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதோடு, நூறு நாள் வேலை திட்டத்தை வருடந்தோறும் தருவோம் எனவும் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து திருவள்ளூர் திமுக எம் எல் ஏ வி.ஜி.ராஜேந்திரன் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்,நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை 200 நாட்களாக மாற்ற திமுக கூட்டணி நடவடிக்கை எடுக்குமென அவர் பிரசாரத்தின் போது பேசினார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி குப்பம், திம்ம சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். மீண்டும் பதவிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் விரைவில் மாநில அரசுக்கும் கொண்டு வரப்படும் என்றார்.