பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று உச்சக்கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இத்துடன் தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று இரவு மதுரை வர உள்ளார். இரவு நட்சத்திர விடுதியில் தங்கி நாளை ஹெலிகாப்டர் மூலம் தேனி சென்று பிரச்சாரம் மேற்கொள்ள மோடி திட்டமிட்டுள்ளார்.
அங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் பிரச்சாரக்கூட்டத்தில் பேசும் பிரதமர் அதிமுகவின் தேனி மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோருக்காக வாக்கு சேகரிப்பார்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் தங்கும் இடம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை உள்ள பகுதியை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.