​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திவீரம்

Published : Apr 12, 2019 6:30 AM

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திவீரம்

Apr 12, 2019 6:30 AM

வைகோ:

திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அச்சமயம் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக மலையாள நடிகை சாந்தினியும் அதே பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து வந்தார். இதனையடுத்து அங்கு திரண்ட திமுக கூட்டணி தொண்டர்கள் சாந்தினியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வைகோ அங்கிருந்து சென்ற பின்பு, சாந்தினியின் பிரச்சார வாகனம் விடுவிக்கப்பட்டது.

ஜி.கே.வாசன்:

அரக்கோணம் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, ஆற்காடு பேருந்து நிலைய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பினை அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதிசெய்யும் என தெரிவித்தார்.

டிடிவி தினகரன்:

மயிலாடுதுறை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றால், அ.தி.மு.க.வுக்கோ அல்லது தி.மு.க. வுக்கோ ஆதரவளிக்காது என்றார்.

கலாநிதி வீராசாமி:

வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தனது தொகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.  திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற அவர், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திறந்த ஜீப்பில் நின்றபடி  வாக்கு சேகரித்த அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், தேங்காய் உடைத்தும் வரவேற்றனர்.

விஜயபிரபாகரன்:

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வாக்கு சேகரித்தார். திறந்த வேனில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், விருதுநகர் தனது தாத்தா மற்றும் பாட்டியின் சொந்த ஊர் என தெரிவித்தார். தேமுதிக சார்பாக இது வரை யாரும் டெல்லி சென்றதில்லை என்ற அவர், இந்த முறை வாக்களித்து மக்கள் டெல்லிக்கு அனுப்பிவைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிரேமலதா விஜயகாந்த்:

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திருவள்ளூர் மக்களவை தொகுதி வேட்பாளர் வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளரான வைத்தியநாதன், ஆகியோரை ஆதரித்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வேட்பாளர் வேணுகோபாலுக்கு வாக்களித்து, அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்றுத்தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எ.வ.வேலு:

திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்பென்னாத்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுகவும் அதில் உள்ள தோழமை கட்சியினரும் ஒரே கருத்தை உடையவர்கள் என்றார். அதனால்தான் தங்களது தேர்தல் அறிக்கை ஒரேமாதிரியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

ஐ.பெரியசாமி:

திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரான வேலுச்சாமிக்கு ஆதரவாக, அக்கட்சியைச் சேர்ந்த, ஐ.பெரியசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அவர், கோயிலிலேயே நின்று மைக்கில் வாக்கு சேகரித்தார். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கோயிலில் நின்றுகொண்டு அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம், பிற கட்சினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான மரகதம் குமரவேலை ஆதரித்து, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  பரப்புரை மேற்கொண்டார். மதுராந்தகத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், தருமபுரியில் அன்புமணியின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் அதுபோல இங்கு போட்டியிடும் மரகதம் குமரவேலின் வெற்றியும் உறுதியாகிவிட்டது என்றார். தேர்தலுக்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கமீலாநாசர்:

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் கமீலாநாசர், ராயப்பேட்டையில் வீடு தோறும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பிரதானமாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க தான் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.

டிடிவி தினகரன்:

சிதம்பரம் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் இளவரசனை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தங்களுடைய வேட்பாளர் வெற்றிபெற்றால் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய நகரங்களில் மாணவர்களுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி தருவார் என தெரிவித்தார்.

கரூர்:

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான நிலுவை தொகையை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமுத்திரக்கனி:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து செல்லூர் பகுதியில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்க்சிஸ்ட் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வரவில்லை என்றும், நெருங்கிய நண்பர் என்ற முறையில் தான் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன் எனவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் தானும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். தேனி மக்களவை தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் வாக்கு சேகரித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்சூர் அலிகான்:

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். துறையூர் பகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் பேசி மகிழ்ந்தார். நூறுநாள் வேலை செய்யும் பணியாளர்களுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன்:

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், முத்துமாரியம்மன் தெருவை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்தவர்களிடம் அவர் வாக்குறுதி அளித்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணனை:

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ச்சுனன் காந்திபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  மத்திய, மாநில அரசுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது தான் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும் என அவர் தெரிவித்தார்.

தயாநிதி மாறன்:

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை பிராட்வே உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்குச் சேகரித்தார். எதிர்க் கட்சிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரை கண்காணிக்காமல் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

சாம்பால்:

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால், துறைமுகம் பகுதிக்கு உட்பட்ட தம்புச்செட்டி தெரு உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் பா.ம.க பண விநியோகம் செய்வதாகவும் கலவரத்தை தூண்டி வெற்றி பெற முயற்சிப்பதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு தாங்கள் எதுவுமே செய்யாத போது அவர் குற்றம்சாட்டுவதாகவும், தயாநிதி மாறன் ஒரு முந்திரிக்கொட்டை என்றும் கூறினார்.

கமல்ஹாசன்:

தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்கா அருகில் மக்கள் நீதி மய்ய நாடாளுமன்ற வேட்பாளர் சம்பத்.ராமதாஸ் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் துரைசாமியை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜயகாந்தை சாடிப்பேசிய அவர், வேட்பாளர்கள் உஷ் என்றால் அவர்கள் தலையில் கொட்டுவார்கள். ஆனால், நான் அப்படி இல்லை என்றார். கமல்ஹாசன் சட்டமன்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசும்போது துரைசாமி என்ற பெயரை தொடர்ந்து தவறாக உச்சரித்து வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. வேட்பாளர் தாழை சரவணன்:

நாகை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை சரவணன் வேதாரண்யத்தை அடுத்த உம்பளசேரி, நீர்மூளை, தலைஞாயிறு, மணக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார். 

திமுக - சுயேச்சை இடையே வாக்குவாதம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளரை திமுகவினர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நத்தம் பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அம்ரோஸ் அந்த இடத்தில் வாக்கு சேகரித்தார். இதற்கு அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினருக்கும், அம்ரோஸுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுகவினர் சிலர் தன்னை தாக்கியதாகவும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அம்ரோஸை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

குடியாத்தம் அதிமுக வேட்பாளர் மூர்த்தி:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மூர்த்தி, குடியாத்தத்தில் உள்ள புதுப்பேட்டை, தரணம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி:

புதுச்சேரியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, அதிமுக எம்எல்ஏ அன்பழகன், கோவிந்த செட்டியார் தோட்டம், கல்லறை வீதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதேபோன்று, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசன், திலகர் நகர், மோகன் நகர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி:

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி கவுல்பாளையம், நெடுவாசல், கல்பாடி, அய்யலூர், எறையசமுத்திரம், சிறுவாச்சூர் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்களின் தேவைகளை அறிந்து அதனை உடனடியாக பூர்த்தி செய்ய, கூப்பிட்ட உடன் ஓடி வந்து பணியாற்ற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அவர் பிரச்சாரம் செய்தார். 

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் லெட்சுமணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பரிசு பெட்டி சின்னத்தில் வாக்குகளை தாருங்கள், வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி தருகிறேன் என அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி, அப்பகுதியின் தண்ணீர் பிரச்சனை தீர சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம், தோணுகால், வானரமுட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா, காரைக்குடியை அடுத்த கோவிலூரில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். கொடுப்பவர்கள் யார் தடுப்பவர்கள் யார் என்று பார்த்து வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் நத்தத்தை அடுத்த ஒத்தக்கடை, முளையூர், வேலாயுதம்பட்டி, சேர்வீடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார்.

தெருவோரக் குழாயில் தலையை நனைத்துக்கொண்டு கோரைப்பாயில் அமர்ந்து பேட்டியளித்த அவர், தனது சொந்த ஊர் ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஜவ்வாதுபட்டி புதூர் என்ற வகையிலேயே திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

தென்காசி:

தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனுஷ்குமார், சங்கரன்கோவிலில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்திவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தண்டாரம்பட்டு , கொழுந்தம்பட்டு, தாணிப்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பேசிய அவர் சாத்தனூர் அணையை தூர்வாரி அதிகளவு தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அணையில் உள்ள பூங்கா 80 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும் தீம் பார்க் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர்:

மத்தியிலும் மாநிலத்திலும் மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ. ராசாவை ஆதரித்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடையில் வாக்கு சேகரித்த வைகோ, இதனைக் கூறினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் தமிழ்மாறன் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் முருகசாமி ஆகியோரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். கிழக்குக்கடற்கரை சாலை ரயில் திட்டம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

மதுரை:

மழையின்றி அல்லல்பட்ட விவசாயிகள் 60 லட்சம் பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க எண்ணியதை திமுக வழக்கு போட்டு தடுத்ததாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக உசிலம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இவ்வாறு கூறினார்.

விருதுநகர்:

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் அழகர்சாமியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருமங்கலத்தில் பேசிய அவர் நான்கு வழிச்சாலை பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனவும், மதுரை விமானநிலைய விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

கோவை:

கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரச்சாரம் செய்தார். சங்கனூர் பகுதியில் பேசிய அவர் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் பிரதமராக மோடி வருவது உறுதி என கூறினார். அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கோவை மாநகர்க்கு மெட்ரோ ரயில் சேவை கண்டிப்பாக கொண்டு வரப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

சேலம்:

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக, எடப்பாடி மற்றும் கொங்கணாபுரத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக அரசு மக்களுக்காக கொண்டு வந்துள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த அவர் திமுக வையும் காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டுவதாக கர்நாடகத்தில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறிய அவர் தமிழகத்தைப் பாலைவனமாக்க நினைக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதைத் தடுத்தவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

வடசென்னை:

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக நடிகர் இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் பேசிய அவர்  நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் எனவே இந்த கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கூறினார்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன் பாரிவாக்கம், கண்ணப்பாளையம், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பூந்தமல்லியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும் எனவும், தற்போது உள்ள சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும் என கூறி வாக்கு சேகரித்தார்.

திருவாரூர்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து  மு.க.தமிழரசு மற்றும் அவரது மகன் நடிகர் அருள்நிதி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். கள்ளர் தெரு, துர்க்காலய ரோடு,கொடிக்கால் பாளையம், புதுத்தெரு, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் நடந்து சென்றும், திறந்த வாகனத்தில் சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேனி:

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் போடியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர்க்கு  விரைவாக ரயில் திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்று வரும் மக்களுக்கு மானியம் பெற்று தருவதாகவும் கூறினார்.

நெல்லை:

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத கட்சிகளை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் கார்த்திக் பேசினார். நெல்லை அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், தேசத்தின் எதிர்காலத்தை நோக்கி தாம் பயணம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

சிவகங்கை:

மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு அகற்றப்பட வேண்டும் என்று சிவகங்கையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாடலாசிரியர் சினேகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், கண்டிப்பாக 9 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறினார். இலவசங்களைக் கொடுத்து ஏழ்மையை விரட்டுவோம் என்று கூறுபவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள் என்றும், வேலைவாய்ப்பை கேளுங்கள் என்றும் கமல்ஹாசன் தமது பேச்சில் குறிப்பிட்டார்.

டிடிவி தினகரன்:

முற்போக்குக் கூட்டணி பிற்போக்குக் கூட்டணியாகிவிட்டதாக திமுக -காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து பிரச்சாரம் செய்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். கடலூர் மக்களவைத் தேர்தல் அமமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் பேசிய அவர், திமுக தொடர்ந்து தேர்தலில் தோல்விகளை சந்தித்து வருவதால் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலைக் கண்டு அச்சம் என்று கூறினார். மக்கள் யார் பக்கம் என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

வைகோ:

ராணுவத்தினர் பெயரைக் கூறி ஓட்டுக் கேட்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து சத்தியமங்கலம் பகுதியில் வைகோ பேசினார். அப்போது, நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்று அவர் தெரிவித்தார்.