​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை கொலை பால்கார இளைஞர் கைது..! பெண்களே உஷார்

Published : Apr 11, 2019 9:42 PM

இரட்டை கொலை பால்கார இளைஞர் கைது..! பெண்களே உஷார்

Apr 11, 2019 9:42 PM

திருத்தணியில் நகைக்காக தாய் மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்த எம்.ஆர்.எப் ஊழியர் வனப்பெருமாள். இவர் இரவு பணிக்கு சென்றுவிட வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி வீரலட்சுமியும் 10 வயது மகன் போத்திராஜூம் கடந்த 8ந்தேதி அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக கிடந்தனர். வீட்டில் இருந்த 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

திருத்தணி - அரோக்கணம் நெடுஞ்சாலையோரம் அமைந்திருந்த வீட்டில் இந்த கொலை கொள்ளை சம்பவம் நடந்ததால் வட மா நில கொள்ளையராக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளை மற்றும் சம்பவம் நடந்த அதிகாலை 5 மணி அளவில் அந்த பகுதியில் காணப்பட்ட செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரித்த போது இரட்டைக் கொலை மர்மம் விலகியது.

அந்த பகுதியில் பால்வியாபாரம் செய்து வந்த வெங்கடேசன், வனப்பெருமாள் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவர். சிறுவயது முதலே வனபெருமாளின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சேர்க்கை சரியில்லாததால் பால்வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதுடன் கடனிலும் சிக்கி தவித்துள்ளான் வெங்கடேசன், இதனால் ஏதாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்ட அவன், தனக்கு நன்கு அறிமுகமான வனபெருமாளின் வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பது என்று முடிவு செய்துள்ளான்.

காரணம் மதுரையை பூர்வீகமாக கொண்ட வனபெருமாள் வீரலெட்சுமி தம்பதி வசதியாக இருப்பதாகவும், கழுத்தில் 10 சவரனுக்கு தாலி சரடு அணிந்திருந்ததால் வீரலெட்சுமியிடம் ஏராளமான நகை இருக்ககூடும் என்றும் வெங்கடேசன் கருதி உள்ளான்.

அதன் படி கடந்த 8ந்தேதி வனபெருமாள் இரவு பணிக்கு சென்றதை அறிந்து மனைவி வீரலெட்சுமி வாசலில் கோலம் போட வெளியில் வரும் போது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிப்பது என்ற திட்டத்துடன் முகமூடி அணிந்தபடி வீட்டிற்கு வெளியே காந்த்திருந்துள்ளான் வெங்கடேசன்.

அதிகாலை 5 மணிக்கு வீட்டின் பின்பக்கம் விளக்கு எரிந்ததும் வீரலட்சுமி விழித்து பின்பக்ககதவை திறந்து தண்ணீர் பிடிப்பதற்கு பின்வாசலுக்கு வந்துள்ளார் என்பதை உணர்ந்து தயாரான வெங்கடேசன், அவர் தண்ணீர் வாளியுடன் வெளியே வந்ததும் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்துள்ளான்.

சிறிய இரும்பு கதவை தாண்டி பின்பக்க அறைக்குள் குதித்த போது சத்தம் கேட்டு வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்திருக்கிறார் வீரலெட்சுமி, அவரிடம் வீட்டில் உள்ள நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளான் வெங்கடேசன்.

சிறுவயது முதலே வீட்டிற்கு வந்து செல்பவன் என்பதால் அவனது குரலை வைத்து நீ வெங்கடசன் தானே …? என்று வீரலெட்சுமி அடையாளம் கண்டு கொண்டதால் அதிர்ந்து போன வெங்கடேசன், இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்தும் சுவற்றில் தலையை மோதியும் கொடூரமாக கொலை செய்துள்ளான்.

சத்தம் கேட்டு விழித்து எழுந்த சிறுவன் போத்திராஜ் செல்போன் மூலம் அவனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க முயன்றதால் அயர்ன்பாக்ஸ் வயரால் அவனை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான் வெங்கடேசன். வீட்டிற்குள் யாரும் வந்து விடக்கூடாது என்று அவசர அவசரமாக முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு வீரலெட்சுமி கழுத்தில் கிடந்த தங்கதாலி சரடு உள்ளிட்ட நகைகளையும் பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு தப்பியதாக வாக்கு மூலம் அளித்துள்ளான்.

கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தடயங்களை வைத்து வெங்கடேசனை விரைவாக கைது செய்துள்ள காவல்துறையினர் பாராட்டுக்குறியவர்கள். அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் வீரலெட்சுமி தவிர்த்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீரலெட்சுமி அணிந்திருந்த தாலிசரடு வீட்டில் வசதியாக இருப்பது போன்ற தோற்றத்தை பக்கத்து வீட்டு வெங்கடேசனிடம் ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் கணவன் இல்லாத தருணம் அதிகாலையில் தன்னந்தனியாக வீட்டை விட்டு வெளியில் வந்து கோலமிடுவதை வழக்கமாக வைத்திருந்தது. தண்ணீர் பிடித்து விட்டு பின்பக்க கதவை திறந்தே வைத்திருந்தது.

வீட்டிற்குள் எளிதில் வெளி நபர் ஏறி நுழையும் வகையில் பக்கவாட்டு சுவற்றில் இரும்பு கேட் அமைக்கப்பட்டிருந்தது. போன்றவை கொள்ளையனுக்கு வசதியாக போய்விட்டது என்றும் கொள்ளையன் வெங்கடேசனை அடையாளம் தெரியாதது போல நடந்து கொண்டிருந்தால் கூட வீரலெட்சுமியும், அவரது மகனும் கொல்லப்படாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்கின்ற பெண்கள், எப்போதும் கதவை தாளிட்டு வைத்திருக்க வேண்டும், அறிமுகமான நபர்களாக இருந்தாலும் வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் வந்து செல்ல அனுமதிக்க கூடாது. அதிக அளவு நகை பணம் இருந்தால் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

கொள்ளையனும் , கொலையாளியும் எங்கோ இருந்து வீடு தேடி வரமாட்டார்கள் நமக்கு வெகு அருகிலேயே, நம்மை நோட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்ற எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளது இந்த கொடூர இரட்டை கொலை கொள்ளை சம்பவம்..!