​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

Published : Apr 11, 2019 9:53 AM

தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

Apr 11, 2019 9:53 AM

திண்டுக்கல் லியோனி:

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேசினார்.

சீமான்:

நாகை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரைஆதரித்து நாகையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் பாரட்டியது குறித்துப் பேசிய சீமான், ரஜினி நடிகர் என்றும் மோடி இயக்குநர் என்றும் தெரிவித்தார். ரஜினிக்கு தலைக்கு மேலும் ஒன்றும் இல்லை, தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறினார்.

டி.டி.வி தினகரன்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு கம்யூனிஸ்ட்டுகள் இதுவரை என்ன செய்தார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட டி.டி.வி தினகரன், சிவப்புத்துண்டைப் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றார்.

அமைச்சர் பாண்டியராஜன்:

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட தொண்டர்களை தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பாட்டுப்பாடி கட்டுப்படுத்தினார். திருவள்ளூர் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதனை ஆதரித்து பா.ம.க சார்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்ட மேடைக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வரத் தாமதமான நிலையில், அங்கிருந்த தொண்டர்களில் ஒரு பகுதியினர் கத்திக் கூச்சல் போட்டுள்ளனர். இதைக் கண்ட நிர்வாகிகள், கட்சியின் பெயரைக் கெடுக்காதீர்கள் என்று மைக்கில் கூறி அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர். தொண்டர்களின் கூச்சல் அடங்காத நிலையில், திடீரென அமைச்சர் பாண்டியராஜன் எழுந்து பாடல் ஒன்றை பாடி தொண்டர்களை சமாதானம் செய்தார்.

நாகை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ்:

நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் அருகேயுள்ள பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திரநல்லூர், திருக்கண்ணமங்கை, மணக்கால் ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் காமராஜ்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை ஆதரித்து, திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது, கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

உதயநிதி ஸ்டாலின்:

வேடசந்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த உதயநிதி ஸ்டாலின், கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஜோதிமணி உள்ளிட்டோர் பேசினர். உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக மக்கள் மாலை 6 மணி முதல் காத்திருந்த நிலையில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேல் வந்த உதயநிதி ஸ்டாலின் கையை அசைத்துவிட்டுச் சென்றார்.

விஜயபிரபாகரன்:

விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். பட்டாசு வெடித்தும், விஜயகாந்தின் திரைப்பட பாடலுக்கு நடனமாடியும் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது பேசிய விஜயபிரபாகரன், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேனியை அடுத்த பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, மதுரை அடுத்த தேனூர் பகுதியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அமைச்சர், தங்கள் வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றிபெற்றால் தேனி மக்களவை தொகுதிக்கு தேவையான வசதிகளை மத்திய அரசிடம் கேட்டு பெற்று நிறைவேற்றுவார் என கூறினார்.

ஜெயவர்தன்:

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் சென்னை அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், மேற்கு சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு தேர்தலில் வெற்றி பெறுவது தி.மு.க.வின் வாடிக்கை என்று அவர் கூறினார்.

பெரம்பூர் தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர்:

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆர்.டி.சேகர் கொடுங்கையூர் சுற்றுவட்டாரங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார். கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்றாலும் அது தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது என்று அவர் கூறினார்.

இயக்குனர் கரு.பழனியப்பன்:

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து, கோவையில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கரு.பழனியப்பன், கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500,1000 ரூபாய்களை மதிப்பிழக்க செய்தது குறித்து பாஜக மற்றும் அதிமுகவினர் பேசாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மயிலாடுதுறை தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம்: 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரித்தார். அவருக்கு முன் ஏராளமான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.

ராமதாஸ்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து சென்னை நங்கநல்லூரில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக கனவு காண்பதாகவும் அவர்தான் தி.மு.க.வை முடிவுக்கு கொண்டு வரப் போவதாகவும் ராமதாஸ் கூறினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேண்டுமா மருத்துவர் வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜோதி மணி:

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி பரமத்தியை அடுத்த தண்ணீர் பந்தல், விசுவநாதபுரி, பள்ளமருதப்பட்டி, உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்தார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

கோவை மநீம வேட்பாளர் மகேந்திரன்:

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மன்குளம், புலியகுளம், பியார் நகர், கோட்டை மேடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் நடந்து சென்று பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

தருமபுரி:

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளார் செந்தில்குமார் இலக்கியம்பட்டி,வெண்ணாம்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குச் சேகரித்தார்.

தஞ்சை:

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனிமாணிக்கம் பட்டுக்கோட்டையில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார். பேருந்து நிலையம் அருகே தெருமுனைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தென்னை விவசாயத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முத்தரையர் காலனி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மோடி முதலமைச்சர் ஆன பிறகு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

கோவை:

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், சிங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது தான் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும் என தெரிவித்தார்.

விருதுநகர்:

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விருதுநகர் மக்களவை தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.