​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

Published : Apr 09, 2019 11:27 AM

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

Apr 09, 2019 11:27 AM

மதுரை:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வாக்குகள் சேகரித்தார். சிலைமான், புளியங்குளம், விரகனூர், சிந்தாமணி, பனையூர், நெடு மதுரை, கல்லம்பல் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் அழகர்சாமியுடன் பிரச்சாரம் செய்தார்.

திருப்பூர்

தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாத மோடி அரசினை அகற்றுவதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மதிமுக வேட்பாளர் அ. கணேசமூர்த்தியை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் வைத்தியநாதன் பெண்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்டார்.

பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டரசன்பேட்டை, சித்துக்காடு, அனைக்கட்டு சேரி, நேமம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனிலும், நடந்து சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் அமைச்சர் பெஞ்சமின், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் மேளதாளத்துடன் வேட்பாளர் வைத்தியநாதனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சர் கருப்பணன், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் சென்றனர். அப்போது, சத்தியமங்கலம்-கோவை சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிமாக இருந்தது.

இந்நிலையில், தான் சென்ற காரில் இருந்து இறங்கிய அமைச்சர் கருப்பணன் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.

கரூர்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டு கொண்டுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

பெண்களை தம்பிதுரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், உடனடியாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியுடன், திறந்த ஜீப்பில், கிராமம், கிராமமாக சென்று, ஜோதிமணி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

திருவாரூர்

விவசாயிகளின் வாழ்வையும் வருமானத்தையும் மத்தியில் உள்ள பாஜக அரசு அழித்து விட்டதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாகை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டிகலைவாணன் ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

பூந்தமல்லி

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாரிவாக்கம் வைத்தியநாதன் பெண்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு கேட்டார்.

பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டரசன்பேட்டை, சித்துக்காடு, அனைக்கட்டு சேரி, நேமம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனிலும், நடந்து சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளருடன் அமைச்சர் பெஞ்சமின், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் மேளதாளத்துடன் வேட்பாளர் வைத்தியநாதனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே அவர் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சார நேரம் முடிவடைந்து விட்டதால் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் டிடிவி தினகரன் சைகை மூலம் பிரச்சாரம் செய்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு அக்கட்சித் தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

நெல்லை

வெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடப்பட்ட ஜவுளிக்கடை விளம்பரம் போல பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அரக்கோணம்

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கும்படி அரசை வலியுறுத்துவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மயிலாடுதுறை

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி எண்ணற்ற நலத்திட்டங்களைச் செய்திருப்பதாக அதிமுக பேச்சாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பேசிய அவர், மோடி பிரதமரான பின் இந்தியாவை நண்பராக சவுதி ஏற்றுக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமியை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஊத்தங்கரையில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த கடியாபட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கட்டும் என்றார்.

தென்சென்னை

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்த்தன் கிண்டி ரேஸ்கோஸ் சாலை, மடுவாங்கரை உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். 

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்த்தனை ஆதரித்து சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரத்தில் பா.ஜ.க. மீனவர் அணி பிரச்சாரம் நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் சென்ற பா.ஜ.க.வினர் இரட்டை இலை மற்றும் தாமரையை கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்து பிரச்சாரம் மேற்கொண்டனர். 

சிதம்பரம்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் கூட்டணிக் கட்சியினருடன் பூதககேணி, பள்ளிப்படை, மாரியப்பா நகர், கிள்ளை, பரங்கிப்பேட்டை , ஆகிய இடங்களில் வாக்குச் சேகரித்தார். 

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவுக்கு ஆதரவாக, உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கலைஞர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினம் அபிராமி திருவாசல் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது  தாம் நடிகைகளோடு சுற்றவில்லை என்றும், கஜா புயலின்போது, டெல்டா மாவட்டங்களை வலம் வந்ததாகவும் உதயநிதி தெரிவித்தார். 

நாகை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை சரவணனை ஆதரித்து வேதாரண்யத்தை அடுத்த காரியாப்பட்டினம், தென்னம்புலம், குறவப்புலம், ஆயக்காரன்புலம்,பிராந்தியங்கரை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரித்தார்.  

நாகை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியுடன் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து, திருவாரூரில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வடபாதிமங்கலத்தில் பொதுமக்களிடையே பேசிய அவர், அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்தார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீசை ஆதரித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதிகளில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, செந்தாரப்பட்டி என்ற இடத்தில் பரப்புரை முடிந்து திரும்பிய பிரேமலதாவை, 13ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர்.

மத்தியச்சென்னை:

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால், சென்னை நுங்கம்பக்கத்தில் வள்ளுவர்கோட்டம் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

வடசென்னை:

சென்னை, கொடுங்கையூரில், அதிமுக கூட்டணியின் வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், பெரம்பூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து, பாமக நிறுவனர், டாக்டர் ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கடந்த முறை அன்புமணியிடம் டெபாசிட் இழந்தது போன்று, தற்போது, திமுக கூட்டணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்றார்.

தருமபுரி:

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மேட்டூரை அடுத்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க. கூட்டணி விவசாயிகளை சார்ந்த கூட்டணி என்றும், தி.மு.க. கூட்டணி முதலாளிகள் சார்ந்த கூட்டணி என்றும் தெரிவித்த அவர், பிரதமர், முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகர் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நல்லதம்பியை ஆகியோரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். தேர்தல் அறிக்கையில் உள்ளது போல் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம் என்றும் நாடாளுமன்ற வேட்பாளர் மக்களுக்காக ஏதும் செய்யவில்லை என்றால் அவரது ராஜினாமா கடிதத்தை தன்னிடம் ஒப்படைத்து விடுவார் என்றும் மத்தியில் பிரதமர் யார் என்பது முக்கியம் இல்லை. நமது உரிமைகளை மத்தியில் கேள்வி கேட்டு தேவைகளை கொண்டு வரும் வேட்பாளரே முக்கியம் என்று கூறி வாக்கு சேகரித்தார். 

பெரம்பலூர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் திமுக கூட்டணி கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெங்கங்குடி, ஈச்சம்பட்டி, சமயபுரம் நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் வேனில் அமர்ந்தபடியே மைக்கில் பேசியவாறு அவர் வாக்கு சேகரித்தார். பரப்புரையின்போது திமுக தலைவர் ராகுல்காந்தி என தவறுதலாகக் குறிப்பிட்ட பாரிவேந்தர், பின்னர் சுதாரித்துக் கொண்டார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர் டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரதான பிரச்சனையான தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கப் பாடுபடுவேன் என விஜயபாஸ்கர் கூறினார். கடைகள் மற்றும் வீடுகளில் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, மங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கணுவாப்பேட்டை பகுதியில், அக்கட்சியின் தலைவர் ரெங்கசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், துணைநிலை ஆளுநர் மீது புதுச்சேரி காங்கிரசார் புகார்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதாக ரெங்கசாமி குற்றம்சாட்டினார். 

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகரன் தனது ஆதரவாளர்களுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அதிமுகவின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்த அவருடன் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆனந்த் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தையாவை ஆதரித்து பேசிய அவர் மக்களை நம்பி தேர்தலில் நிற்பதாகவும், இது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கோட்டை என்றும், இங்கு வெற்றி பெறவில்லை என்றால், எந்த பகுதியில் வெல்ல முடியும் என்றும் பேசினார்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில், கூட்டணி கட்சியினருடன், தெரு, தெருவாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இவருடன், ஏராளமான பெண்கள் ஊர்வலமாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

தேனி:

தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு இருவரும் பெரியகுளம் ஒன்றியப் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். வடபுதுப்பட்டி, லெட்சுமிபுரம், ஜல்லிபட்டி, சரத்துபட்டி, தாமரைகுளம், T.கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிசளில் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கார்த்திக் வேனில் அமர்ந்தபடியே பேசி வாக்கு சேகரித்தார்.

நாமக்கல்:

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் காளியப்பன் துச்சத்திரம், களங்காணி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, உடுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். தொடர்ந்து நாமக்கல் தாலுகா ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். அவர்களும் அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தருவதாக உறுதியளித்தனர்.

காரைக்கால்:

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாரியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், கீழகாசாகுடி, கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி, வடமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்ற படி வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் - திமுக அறிவித்துள்ள திட்டங்களை மக்கள் பெரிதும் வரவேற்பதால் கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் நடராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த எடைமேலையூரில் அவரை வரவேற்று கட்சியினர் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த இரண்டு குடிசை வீடுகள் மற்றும் உணவகத்தில் தீப்பற்றியது.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அய்யப்பந்தாங்கல், கெரும்பாக்கம், கோவூர், பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த அவர் வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில் திட்டம் போரூர் வழியாக பூவிருந்தவல்லி வரை கொண்டு வரப்படும் என்றார்.மேலும் மக்களுக்கான திட்டங்களை  செயல்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். அவருடன் கூட்டணி கட்சியினரும் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.