​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Published : Apr 08, 2019 12:24 PM

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

Apr 08, 2019 12:24 PM

1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா விவசாய கடன், சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், வேளாண்-ஊரக துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர். உறுதிமொழிப் பத்திரம் என பொருள்படும் வகையில், சங்கல்ப பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

சேதத்திற்கு முதன்மை என்ற தலைப்பில் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்பாக துளிகூட சமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவுபடுத்தப்படும், பாதுகாப்புத் துறைக்கான கொள்முதலில் சுயசார்பு உறுதிப்படுத்தப்படும், எல்லைகளில் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத்துறையில் ரூ.100 லட்சம் கோடி மூலதன முதலீடுகள் செய்யப்படும், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், நாடு முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும், வட்டியில்லா கிசான் கிரடிட் கார்டு கடன் மூலம், 1 லட்ச ரூபாய் வரை வட்டியில்லா விவசாய கடன் வழங்கப்படும், விவசாயத்துறையில் உற்பத்தியை மேம்படுத்த, வேளாண்-ஊரக துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

சிறு வணிகர்களுக்காக தேசிய வர்த்தகர்கள் நல வாரியம் அமைக்கப்படும், சில்லறை வர்த்தகத்திற்கான தேசிய கொள்கை வகுக்கப்படும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதி என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பாஜக அளித்துள்ளது. சுவிதா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 1 ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும், 2022ஆம் ஆண்டுக்குள் 75 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக ஏற்படுத்தப்படும், மேலும் 200 கேந்திரிய மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஏற்படுத்தப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 கிலோமீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்படும், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அனைத்து வழிவகைகளும் ஆராய்ந்து விரைவுபடுத்தப்படும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பன உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.