​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னம் தெரியாமல் தவிக்கும் தொண்டர்கள்..! பிரசாரத்துக்கு செல்வதில் சிக்கல்

Published : Mar 15, 2019 8:27 PM

சின்னம் தெரியாமல் தவிக்கும் தொண்டர்கள்..! பிரசாரத்துக்கு செல்வதில் சிக்கல்

Mar 15, 2019 8:27 PM

அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வரும் நிலையில் தனித்து போட்டி என்று அறிவித்த சில கட்சிகள் தங்கள் சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இன்னும் சில கட்சிகளோ 39 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மெகா கூட்டணி:

அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் காணப்போவதாக அறிவித்துள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களுடன் எஸ்.டி.பி.ஐ என்ற கட்சியை கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி விட்டு 38 தொகுதிகளில் களம் காண தயாராகி வருகின்றது.

இந்த நிலையில் தனித்து களம் காணும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு கிடைத்துள்ள புதிய சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாம் தமிழர்:

கடந்த ஆண்டு வரை இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு வாக்கு கேட்டு முழங்கிய நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு இந்த முறை இரட்டை மெழுகு வர்த்தி சின்னம் கிடைக்கவில்லை..! இந்த முறை நாம்தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை 19 ந்தேதி தொண்டர்களிடம் முறைப்படி அறிவிக்க உள்ளார் சீமான். இந்த நிலையில் கட்சி தலைமை அறிவிக்காததால் சின்னத்திற்கு காலி இடம் விட்டு முகநூலில் வாக்கு கேட்டு வருகிறார்கள் நாம்தமிழர் தம்பிகள்..!

குக்கரா ? புதிய சின்னமா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் கிடைத்து விடும் என்ற அதீத நம்பிக்கையில் பெரும்பாலான ஊர்களில் அக்கட்சியின் தொண்டர்கள் குக்கர் சின்னத்திற்கு தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். குக்கர் சின்னம் உறுதி செய்யப்படாவிட்டால் கிடைக்கும் புதிய சின்னத்தை 30 நாட்களில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டிய நிலை அமமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

டார்ச் லைட்டுடன் கமல்:

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் , கமல் எங்கு சென்றாலும் கையில் டார்ச் லைட்டுடன் சென்று சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சித்து வருகிறார்.

வேட்பாளர்களை தேடும் சமக:

இது ஒரு புறம் என்றால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்த சமத்துவ மக்கள் கட்சியோ 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த போதே சமத்துவ மக்கள் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராவணன் ராமசாமி என்பவர் போட்டியிடாமல் தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனோ, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று விட்டு, தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மாநில பொதுக்குழுவை கூட்டி இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பதாக கூறியிருப்பது வேடிக்கையின் உச்சமாக உள்ளது என்கின்றனர் வாக்காளர்கள்.