​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

Published : Mar 15, 2019 6:37 AM

மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் தீவிர வாகன சோதனை

Mar 15, 2019 6:37 AM

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சுமார் 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். 

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரியகுளம் சாலை அருகே தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அதில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில், அந்த நபரின் பெயர் தங்கராஜ் என்பதும் பஞ்சு வியாபாரியான அவர், சென்னையிலிருந்து வருசநாட்டுக்கு அந்த பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்ததும் தெரியவந்தது. ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே செம்பட்டி-வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் உள்ள சித்தையன்கோட்டை பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதில், கார் ஒன்றில் ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பணம்  கொண்டு செல்வதற்கு உரிய ஆவணம் இல்லை என்று தெரிய வரவே, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையிலுள்ள காட்டுமொகதூம் பள்ளி அருகே, தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர் ராஜலெட்சுமி தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை வழிமறித்த காவலர்கள், அதனை சோதனையிட்டனர். அதில் முறையான ஆவணங்களின்றி ரூபாய் 4 லட்சத்து 68 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருச்செந்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதே போன்று சேலம் மாவட்டம் சங்ககிரியிலிருந்து  ஈரோடு செல்லும் சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது, சேக் சையத் எனும் அந்த நபர் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாயை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்ததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.