​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

Published : Feb 04, 2019 3:51 PM

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

Feb 04, 2019 3:51 PM

சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. 

சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஊருக்குள் நுழையும் யானைகளைப் பாதுகாப்பாகக் காட்டில் விட விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே மதுக்கரை மகாராஜா என்ற யானையைக் கும்கியாக மாற்றும்போது அது இறந்து விட்டதை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், யானையைக் கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். யானையைத் தூக்க ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தியுள்ளதால் யானை காயமடைந்துள்ளதையும், அமைச்சர் தெரிவித்த கருத்து செய்தியாக வந்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.