​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

Published : Jan 22, 2019 4:02 PM



மேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

Jan 22, 2019 4:02 PM

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகாதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, அனுமதி அளித்ததை திரும்ப பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழக அரசு தொடர்ந்தது.

இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை, கடந்த 18 ஆம் தேதி மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்தது. உச்சநீதிமன்றத்திலும் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேகதாதுவில் அணை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசும், மத்திய அரசும் தாக்கல் செய்த அறிக்கைக்கு பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.