​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது? - உயர்நீதிமன்றம் கேள்வி

Published : Jan 21, 2019 4:46 PM

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த விடாமல் தடுப்பது எது? - உயர்நீதிமன்றம் கேள்வி

Jan 21, 2019 4:46 PM

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இருக்க அரசை தடுப்பது எது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

சிலை கடத்தல் குறித்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் ஒரு சதவீதம் மட்டுமே தமிழக அரசு செயல்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்குகள் குறித்த ஆவணங்களைக் காணவில்லை என்றும், இவற்றை வைத்திருக்கு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தலைமறைவாக இருப்பதாகவும் பொன் மாணிக்கவேல் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்க அரசாங்கத்தை தடுப்பது எது என்று கேள்வி எழுப்பினர்.

புனிதமான நீதிமன்றத்தில் வழங்கப்படும் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், குற்றத்தின் அடிப்படை பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது கண்டறியப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சில நிர்வாகக் காரணங்களுக்காக பொறுமையாக இருப்பதாகவும், அதற்காக உத்தரவுகளை தட்டிக்கழிக்கலாம் என்று அர்த்தமல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பொன் மாணிக்கவேலின் குற்றச்சாட்டுகளுக்கு வரும் வியாழக்கிழமைக்குள் டி.ஜி.பி பதில் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் உத்தரவிட்டனர்.