​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓடும் ரெயிலில் இருந்து சாலையில் வீசப்பட்ட ரூ 37 லட்சம் பணம்..! யாருடையது என விசாரணை

Published : Jan 12, 2019 8:33 PM



ஓடும் ரெயிலில் இருந்து சாலையில் வீசப்பட்ட ரூ 37 லட்சம் பணம்..! யாருடையது என விசாரணை

Jan 12, 2019 8:33 PM

ராமநாதபுரம் அருகே  சாலையில் கிடைத்த 37 லட்சம் ரூபாயை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் சாமுவேல், இவர் வெள்ளிக்கிழமை காலை 8:15 மணிக்கு பொன்னையாபுரம் ரெயில்வே கேட் அருகே சென்ற போது மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் இருந்து வீசப்பட்ட பார்சல் ஒன்று இவர் முன் வந்து விழுந்தது.

அந்த பார்சலை பார்த்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமுவேல் என்பவர் அதனை எடுத்து வந்து அருகில் டீக்கடை நடத்திவரும் கந்தசாமியிடம் கொடுத்து விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்த நிலையில் அங்கு வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நகை கடை அதிபர் மகேந்திரன் என்பவர் ரெயிலில் இருந்து தனது பார்சல் தவறி விழுந்து விட்டதாகவும் அதில் ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும் கூறி, பார்சலை தன்னிடம் தறுமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து சாமுவேல் அந்த பார்சல் உங்களுடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு கொடுக்க மறுத்து தகராறு செய்தார். இரு தரப்புக்கும் மோதல் உண்டாகும் சூழல் ஏற்ப்பட்டது. உடனடியாக ரூபாய் நோட்டு பார்சல் விவகாரம் குறித்து சாமுவேல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பார்சலை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து பிரித்து பார்த்தனர். அதில் 500 ரூபாய் நோட்டுகள் கத்தைகத்தையாக இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில் மொத்தம் 37 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்
இருந்ததாக கூறப்படுகின்றது.

காவல்துறையினரின் விசாரணையில், அது யாருடைய பணம் என்று ஊர்ஜிதமாக தெரியாததால் மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வருமானவரித்துறையினர் பணப் பையை திறந்து பார்த்தனர் அதில் உள்ள பணத்துக்கு மகேந்திரனிடம் உரிய கணக்கு கேட்ட போது அவரால் உரிய கணக்கு தாக்கல் செய்ய இயலவில்லை.

மேலும் இது முறையாக வரிசெலுத்தாமல் சேர்த்துவைக்கப்பட்ட ஹவலா பணமாக இருக்கலாம் என்றும் அதனை கடத்தி வந்த நபர் ஆள்தெரியாமல் ஓய்வு பெற்ற ஆசிரியரை தனக்கு வேண்டப்பட்ட நபர் என்று கருதி ரெயிலில் இருந்து பணக்கட்டை தூக்கி வீசி இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினர்.

அதில் இருப்பது பணக்கட்டு என்று தெரியாததால் சாமுவேலும் அந்த பார்சலை மறைக்காமல் டீக்கடைக்காரிடம் ஒப்படைத்துள்ளார். என்ன காரணத்துக்காக இவ்வளவு பெரிய தொகை ரெயிலில் கடத்தி வரப்பட்டு , தெருவில் தூக்கி வீசப்பட்டது என்பது தெரியாமல் காவல்துறையினரும் வருமானவரித்துறையினரும் கடும் குழப்பத்தில் உள்ளனர். கணக்கில் வராத அந்த பணத்தை அரசின் மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரெயில் இருந்து கத்தை கத்தையாக ரூபாய் நோட்டு கட்டு தூக்கி வீசப்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து பரமக்குடிக்கு ரெயிலில் வந்து செல்லும் வெளியூர் நபர்கள் மற்றும் வியாபாரிகள் யார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.