​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி

Published : Jan 12, 2019 12:14 PM

நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டி

Jan 12, 2019 12:14 PM

வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமைத்துப்  போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ள சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்களும், அம்மாநிலத்தின் இருபெரும் போட்டிக் கட்சிகளான பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாதி தலைவர்களுமான மாயாவதியும் அகிலேஷ் யாதவும் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். வரும் மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை உறுதிசெய்த இரு தலைவர்களும், தலா 38 தொகுதிகளை பகிர்ந்து கொண்டுள்ளதாக அறிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில், 2 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெறும் பிற சிறிய கட்சிகளுக்கு அவர்கள் ஒதுக்கியுள்ளனர்.

கூட்டணியில் காங்கிரஸை சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், சோனியா மற்றும் ராகுல்காந்தியின் தொகுதிகளான ரேபரலி மற்றும் அமேதி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று மாயாவதியும் அகிலேஷ் யாதவும் அறிவித்துள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பு மோடி-அமித்ஷாவின் தூக்கத்தை கெடுப்பதாக அமையும் என்று கூறிய மாயாவதி, கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பதால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று கூறினார். கூட்டணியில் சேர்த்தாலும் காங்கிரசின் வாக்கு வங்கி தங்களுக்கு உதவாது என்பதையே கடந்த கால அனுபவம் காட்டுவதாகவும் மாயாவதி தெரிவித்தார்.

பாஜகவின் அகங்காரத்தை முறியடிக்கவே சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோர்த்திருப்பதாகக் கூறிய அகிலேஷ் யாதவ், கூட்டணிக் கணக்கை எப்படிப் போட வேண்டும் என தங்களுக்கு கற்பித்ததே பாஜகதான் என்று கூறினார். மாயாவதி பிரதமராக ஆதரவு தெரிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, தம்முடைய தேர்வு யார் என்பது உங்களுக்கே தெரியும் என பதிலளித்த அகிலேஷ் யாதவ், நாட்டுக்கு பிரதமர்களை உத்தரப்பிரதேசம் கடந்த காலங்களில் அளித்திருப்பதாகவும், அந்த மரபு மீண்டும் தொடரும் எனவும் கூறினார்.