​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..! நூதன கொள்ளையன் கைது

Published : Jan 12, 2019 8:00 AM

வழிபறி பணத்தில் கரும்பு தோட்டம்..! நூதன கொள்ளையன் கைது

Jan 12, 2019 8:00 AM

சென்னையில், 200க்கும் மேற்பட்ட முதியவர்களின் கவனத்தை திசைதிருப்பி நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நகையை திருடிய பணத்தை வைத்து மதுரையில் 45 ஏக்கரில் கரும்பு விவசாயமும் அரிசி மண்டியும் நடத்தி வந்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

சென்னை மயிலாப்பூரில், 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை குறிவைத்து, அவர்களின் கவனத்தை திசைத்திருப்பி, அடுத்தடுத்து, 5 இடங்களில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் நடைபெற்றன.

ஒரே பாணியில் இந்த சம்பவங்கள் நடைபெற்றதால், சிசிடிவி பதிவுகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒரு நபர் முதியவர்களிடம் வந்து தெரிந்த நபர் போல் பேசி சிறிதுநேரத்தில் அவர்களின் மோதிரம் அல்லது நகையை திருடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன.

இந்த காட்சிகளை வைத்து அந்த நபரை அடையாளங் கண்டு வடபழனி முருகன் கோவில் அருகே மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். 

கைதான கொள்ளையன் சிவக்குமார் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன். இதே போல் நூதன முறையில் நகைகளை திருடிய வழக்குகளில் கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த சிவக்குமார் வெளியில் வந்த பின்னரும் அதே பாணியில் கைவரிசை காட்டி வந்துள்ளான்.

சென்னை முழுவதும் 200க்கும் மேற்பட்ட முதியவர்களை ஏமாற்றி நகை பறித்துள்ள கொள்ளையன் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பகுதி என திட்டம் போட்டு திருடி வந்துள்ளான்.

மயிலாப்பூர் பகுதியில் கோயிலுக்கு வரும் முதியவர்களை குறிவைத்து வெள்ளிக்கிழமைகளில் வலம் வந்துள்ளதாக கொள்ளையன் குறித்த ருசிகர தகவல்களை மயிலாப்பூர் போலிசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி கொள்ளையடித்த நகைகளை வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வரும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகுவைத்து கொள்ளையன் சிவக்குமார் பணமாக்கியுள்ளான்.

இந்த பணத்தை வைத்து மதுரையில் 45 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில், கரும்பு விவசாயம் செய்து வருவதாகக் கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் கிறுகிறுத்துப் போயுள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தை வைத்து அரசியல் கட்சியில் பொறுப்பு வாங்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சியளித்துள்ளான் கொள்ளையன் சிவக்குமார்

இதனையடுத்து, கொள்ளையன் சிவக்குமார் கைதான தகவலை, சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவித்துள்ள மயிலாப்பூர் போலீசார் அவனிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையிலடைத்துள்ளனர்.

முதியவர்களை எளிதாக கவனத்தைத் திசை திருப்பி எளிதாக திருடிவிட முடிவதால் இது போன்ற கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

முதியவர்கள் தனியாக செல்லும் போது வீட்டில் இருப்பவர்கள் யாராவது உடன் செல்ல வேண்டும் என கூறும் காவல் துறையினர் உதவுவதாக வரும் மோசடி நபர்களிடம் முதியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்