​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணப்பாறை அருகே மதுரை வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டிக்கொலை

Published : Jan 10, 2019 7:05 AM



மணப்பாறை அருகே மதுரை வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டிக்கொலை

Jan 10, 2019 7:05 AM

மணப்பாறை அருகே சமரசம் பேச அழைத்து கூலிப்படையினர் மூலம் வழக்கறிஞரை வெட்டி சாய்த்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெகதீஸ் பாண்டி..  இவர் தனது சகோதரர்கள் சிலம்பரசன், செளந்தர பாண்டி, உறவினர் ஜெயபாண்டி ஆகியோருடன் சேர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து  தென் மாவட்டங்களுக்கு வரும் கார்களை ஷோரூம்களில் இறக்கும் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார்.

இதேபோல திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் பகுதி காண்ட்ராக்டராக இருந்தவரிடமிருந்து கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அந்த காண்ட்ராக்ட்டை மாற்றி  திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு ஜெகதீஸ் பாண்டி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், திருச்சி பகுதியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், வழக்கறிஞர் ஜெகதீஷ் பாண்டிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து இப்பிரச்சனையை பேசி தீர்க்கலாம் என்றும், இதற்கான இடமாக கரூர் மாவட்டம் தோகமலை அருகேயுள்ள ஐயர் மலைப் பகுதியை, இருதரப்பும் தெரிவு செய்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று ஒரு காரில் ஜெகதீஸ் பாண்டி, அவரது சகோதரர்கள் சிலம்பரசன், செளந்தர பாண்டி உள்ளிட்ட 6 பேர் வந்துள்ளனர். கார் மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலையில் செல்லும்போது, அப்பகுதியில் மறைந்திருந்த கார் ஒன்று திடீரென ஜெகதீஷ்  பாண்டி வந்த காரை வழிமறித்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட கூலிப்படையினர் ஜெகதீஸ் பாண்டியை துண்டால் முகத்தை மூடி சரமாரியாக வெட்டியதோடு, தடுக்க முயன்றவர்களையும் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பி ஓடியுள்ளனர். இதில் வழக்கறிஞர் ஜெகதீஸ் பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிலம்பரசன், ஜெயபாண்டி உள்ளிட்ட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.தகவலறிந்த மணப்பாறை போலீசார் விரைந்து வந்து கொலையான ஜெகதீஸ் பாண்டியின் உடலை மீட்டனர். காயம் பட்டவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கூலிப்படையினரைத் தேடி வருகின்றனர்.