​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை

Published : Jan 10, 2019 6:53 AM

உயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை

Jan 10, 2019 6:53 AM

உயரிய ரத்தப் பரிசோதனைக்காக, முதற்கட்டமாக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் போது முக்கியமான ஒன்றாக இருப்பது ரத்தப் பரிசோதனை. தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 266 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 வகையிலான ரத்தப் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன.

சிவப்பு, வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, உள்ளிட்ட உயரிய ரத்தப் பரிசோதனைகள் செய்ய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களை மக்கள் நாட வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக 100 ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த ரத்தப் பரிசோதனை மையங்களை உருவாக்க தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உயரிய சோதனைகளுக்காக நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் ரத்த மாதிரிகள், பிரத்யேக பெட்டிகளில் வைத்து இருசக்கர வாகனங்கள் மூலம், ஒருங்கிணைந்த மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு வைத்து ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் அந்தந்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் கிராம மக்கள், சிரமம் இன்றி ரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

ரத்தப் பரிசோதனை ஆய்வகத்திற்கான கட்டமைப்பு, ஆய்வக நுட்பனர், உபகரணங்கள், வேதிப் பொருள், பரிசோதனைப் பட்டியல், கால நிர்ணயம் முதலான அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்க 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் நிலையில் உள்ளது.

ஆய்வகக் கூட கட்டமைப்புக்கான வரைபடத்தையும் பொது சுகாதாரத்துறை தயாரித்துள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.