​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த படகுகளுக்கான நிவாரண தொகை உயர்வு

Published : Jan 04, 2019 12:18 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த படகுகளுக்கான நிவாரண தொகை உயர்வு

Jan 04, 2019 12:18 PM

கஜா புயலால் சேதம் அடைந்த பைபர் படகுகளுக்கான நிவாரண நிதி ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர், புயல் பாதித்த பகுதியை பிரதமர் நேரில் பார்வையிடாதது வருத்தம் அளிக்கிறது என்றார். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்றும், தென்னைக்கு வழங்கும் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பட்டுக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏ., சேகர் பேசும்போது, இன்னும் சில இடங்களில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளது என்றும், விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தென்னை பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், மானிய விலையில் மின் மோட்டார் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின், பாதித்த பகுதிகளில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புயல் பாதிப்பு குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர், கஜா புயல் குறித்து வானிலை ஆய்வுமையம் முன்னறிவிப்பு கொடுத்த உடனே தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றார். கஜா புயலினால் 52 பேர் உயிரிழந்தனர் என்றும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேதமடைந்த பைபர் படகுகளுக்கு நிவாரணத் தொகை, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

லட்சக்கணக்கில் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் சில இடங்களில் மின் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார். விவசாயிகள் மறு வாழ்வுக்கு வாழ்வாதார சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும், கஜா மறுவாழ்வு புனரமைப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அதகென தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, முதல் ஆண்டில் ஒரு லட்சம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 50 ஆயிரம் வீடுகள் என மொத்தமாக 3 லட்சம் வீடுகள் 5 ஆண்டுகளுக்கும் கட்டி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.