​​ சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் அமைச்சுப் பணியாளர்கள் திடீர் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் அமைச்சுப் பணியாளர்கள் திடீர் போராட்டம்


சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் அமைச்சுப் பணியாளர்கள் திடீர் போராட்டம்

Jan 29, 2018 6:33 PM

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள், வளாகத்திற்குள்ளேயே திரண்டு திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி வேண்டி காத்திருக்கும் 3 ஆயிரம் பேருக்கு பணி வழங்க வேண்டும், பணியிட மாற்றத்தில் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அமைச்சுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களும் திடீரென அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே திரண்டு போராட்டம் நடத்தினர்.

காவல் ஆணையர் அலுவலக வளாகம் போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்ட மிகுந்த பாதுகாப்புக்குரிய பகுதியாகும். எனவே வழக்கமாக ஆணையர் அலுவலக வாயிலில் நின்று போராட்டம் நடத்தக் கூட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில், காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே அங்கு பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி 29 மற்றும் 30 ஆம் தேதிகளில், பணி நேரம் முடிந்த பின்னர் மாலை 5.50 மணிக்கு ஆணையர் அலுவலக வாயிலின் முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, துறை அதிகாரிகளிடம் அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக, பணி நேரத்திலேயே ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.