​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க தடை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை

Published : Dec 19, 2018 1:09 PM

தமிழகம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை பேனர்கள் வைக்க தடை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை

Dec 19, 2018 1:09 PM

மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் பேனர்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சென்னையில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்காக விதிகளை மீறி அண்ணாசாலை, கிண்டி, ஆலந்தூர், ஜி.எஸ்.டி. ரோடு அரசியல் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கபட்டதாகவும், அவற்றை அகற்றவோ, வழக்கு பதிவு செய்யவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணையின் போது விதிமுறைகளை மீறியும் அனுமதி இல்லாமலும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், ஆனால் யாரும் கைது செய்யப்படவோ, வழக்கு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் 16-ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 15-ஆம் தேதி பேனர்கள் வைக்க அதிகாரிகள்  அனுமதி அளித்துள்ளதாகவும் இரண்டு நாட்கள் முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற விதியில் அதிகாரிகள் கவனம் செலுத்தவிலை என்றும் தெரிவித்தனர். கடந்த 2006 முதல் 12 ஆண்டுகளாக சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள், தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளதாவும், சட்டவிரோத பேனர்களால் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து குறிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அவற்றை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும் மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுத்துவதில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், தாங்கள் உத்தரவுகளை அளித்து வெறுத்துப்போய்விட்டதாகக் கூறினர். அத்தகைய அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அளவுகோலை பின்பற்றுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் பேனர்கள் தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும்  உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினர்.

உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை வாகன ஓட்டிகளுக்கு  இடையூறு ஏற்படும் வகையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்ட யாரும் பேனர் வைக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.