​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை

Published : Dec 15, 2018 8:02 PM

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை

Dec 15, 2018 8:02 PM

குட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. அமைச்சர்கள், டிஜிபி, கலால் வரித்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை மாத மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் எழுதிய வைத்திருந்த டைரி தான் அனைவரையும் சிக்க வைத்துள்ளது.

முதற்கட்டமாக கடந்த மாதம் சென்னையில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் என 6 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் குட்கா வழக்கில் சுகாதரத்துறை அமைச்சரை விஜயபாஸ்கர் விசாரிக்க கடந்த வாரம் சம்மன் அனுப்பட்டது. அதன்படி நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் பிற்பகல் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நீடித்தது. அவரது உதவியாளர் சரவணன் 2 நாட்கள் விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.

விஜயபாஸ்கர் சிபிஐ அலுவலம் உள்ள சாஸ்திரி பவனின் பின் வாசல் வழியாக தனியார் காரில் வந்து சென்றார். அதே போல் குட்கா ஊழலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சட்டவிரோதமாக குட்கா குடோன் இயங்கிய காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி.ரமணா. குட்கா முறைக்கேடு வழக்கில் இதுவரை அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் பக்கம் சிபிஐ விசாரணை திரும்பியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.