​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரம்பரியத்தை பறைசாற்றும் தோடர் இன திருமணங்கள்

Published : Dec 13, 2018 7:11 AM

பாரம்பரியத்தை பறைசாற்றும் தோடர் இன திருமணங்கள்

Dec 13, 2018 7:11 AM

நகர்ப்புற திருமணங்கள் வசதிக்கேற்ப ஆடம்பரத்தின் அறிமுகமாய் மாறிவரும்  நிலையில், குடும்பத்தில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்குவேன் என, மணமகள் கையில் சூடுவைத்து மணமகனை கரம் பிடிக்கும் தோடர்இன மக்களின் ஆதிகாலத் திருமணங்கள் தற்போதும் அரங்கேறி வருகின்றன.

மண நாளில்... மணமேடையில்... மணப்பெண்ணின் குத்தாட்டம்...!

image

பிரமாண்ட மண்டபத்தில் நடன குழுவினர் புடை சூழ வண்ண ஆடைகளுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி மாப்பிள்ளை அழைப்பு...!

இருக்கும் வசதிக்கேற்ப நடக்கிறது நகர்ப்புறத்து ஆடம்பர திருமணம்...!

image

இந்த உற்சாகத்துக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரிய முறைப்படி.. வனமும் வனம் சார்ந்த பகுதியில் வைத்து ஆதிகாலத்து வழக்கப்படி அரங்கேறியது, நீலகிரிமாவட்டம் தாரநாடு மந்து பகுதியில் உள்ள பழக்குடியின மக்களான தோடர்கள் வீட்டு திருமண விழா..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகளின் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்லும் மணமகன் அங்குள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார். தலையில் கால் வைத்து மணமகனையும், மணமகளையும் ஆசீர்வதிக்கின்றனர்

தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் வனத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பச்சை செடிகளை மணமகன் வணங்கும் சடங்கு நடக்கிறது.

வீட்டில் இருந்து மூங்கில் களியில் கொண்டுவரப்பட்ட பாலை மணமகளுக்கு கொடுக்க, அதனை இலையில் பெற்று பருகும் சடங்கும், அதனை தொடர்ந்து மண் பானையில் பொங்கல் வைத்து அதனை இலையை கொண்டு எடுத்து பெரியோர்களை நினைவு கூறும் வகையில் கம்பளி கட்டப்பட்ட கம்பிற்கு முன்னால் படையல் வைத்து வணங்கும் சடங்கும் நடத்தப்படுகின்றது

புகுந்த வீட்டிற்கு செல்லும்போது எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதி இருப்பதை காட்டும் வகையில், கையில் கொடுக்கப்பட்ட விளக்குத் திரிகளை தீயில் எரித்து மணப்பெண் தனது கையில் சூடு வைத்துக் கொள்ளும் சடங்கு சற்று பதைபதைப்பை ஏற்படுத்தினாலும் திருமண பந்தத்தின் சிறப்பை புதுப்பெண்ணுக்கு புரியவைக்கிறது.

இரவு நடக்கும் சடங்குகளை தொடர்ந்து, காலையில் திருமணம் களைகட்ட தொடங்குகிறது. காட்டிற்குள் இருந்து செடிகொடிகளைக் கொண்டு வில்- அம்பு செய்து பாரம்பரிய இசையுடன் மணமகன் எடுத்து வருகிறார்.

அந்த வில்- அம்பை மணமகளிடம் கொடுக்க, அவர் அதனை பெற்று நகா மரத்தின் அடியில் வைத்து வணங்குகிறார்.

image

நகா மரத்தில் துளையிட்டு வைக்கப்பட்ட விளக்கு தீபத்தை உற்றுநோக்கியபடி இருக்கும் மணமகளுக்கு கண்ணீர் வந்ததும், அவர் முன் மணமகன் வந்து நிற்கிறார். இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்கின்றனர்... உறவினர்களின் ஆரவாரத்துடன்..!

திருமண வாழ்க்கை இனிப்பாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக இருவருக்கும் தேன் வழங்கப்படுகிறது

அதனை தொடர்ந்து மணமகள் மற்றும் மணமகனின் சொந்தங்களும் பந்தங்களும் ஒன்றிணைந்து பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்

ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி மணவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்

image

ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சொந்தங்கள் கூடும் இத்தகைய எளிய ஆதி திருமணங்கள் தான் இன்றுவரை தமிழனின் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன..!