​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

Published : Dec 10, 2018 6:17 PM

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார் உர்ஜித் பட்டேல்

Dec 10, 2018 6:17 PM

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து  உர்ஜித் படேல்  ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் விலகல் முடிவை எடுத்துள்ளார். 

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பனிப்போர் நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள உபரிநிதியில் இருந்து அதிக நிதியை மத்திய அரசு கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

வங்கிகள் கடன் வழங்கும் கொள்கைகளை தளர்த்துமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நெருக்கடி அளித்தாக புகார் எழுந்தது.  ஆனால்  மத்திய அரசு தரப்பில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக உர்ஜித் படேல் அறிவித்துள்ளார். துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் 2016 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில் முன்னதாக ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக உர்ஜித் படேல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  ரிசர்வ் வங்கிக்காக பணியாற்றியது தமக்கு பெருமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். அவரது பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொருளாதார நிபுணரான உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கிதுறைக்கு பேரிழப்பு என்றும், அவரது தலைமையில் ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மை பெற்றதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேல் மேலும் பல ஆண்டுகள் பொது சேவை ஆற்ற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தாமே சிறந்த பொருளாதார நிபுணர் என்ற நினைப்பில் பிரதமர் மோடி செயல்படுவதாலேயே பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும் ராஜினாமா செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.