​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Dec 10, 2018 6:08 PM

விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Dec 10, 2018 6:08 PM

விஜய் மல்லையாவை நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி கட்டளை இட்டுள்ளார். 

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

திங்களன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்மா ஆர்புத்நாட் ( Emma Arbuthnot ), மல்லையாவுக்கு எதிரான பண மோசடி, சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் உள்ளது என்றார். அரசியல் கருத்துக்களால்தான் மல்லையாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.   

விஜய் மல்லையாவைப் போன்ற புகழ்பெற்ற, கவர்ச்சியான, பகட்டான, பணக்காரப் பிளே பாயிடம் ஏமாந்து போய் விதிகளை ஓரங்கட்டும் அளவுக்கு, இந்திய வங்கி அதிகாரிகள் பொது அறிவைக் கூட இழந்திருந்தனரா? என்று நீதிபதி எம்மா கேள்வி எழுப்பினார். 

விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட அவர், தீர்ப்பின் விவரங்களை இங்கிலாந்து உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.  இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். 

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் உள்ளதால், அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து சட்டப்படி அவரைக் கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மல்லையா மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் வழக்கு மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கும்.

இதனிடையே மல்லையாவை இந்தியா அழைத்துவர சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஞாயிறன்றே லண்டன் சென்றனர். மல்லையாவுக்கு எதிரான தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிபிஐ ,  அவருக்காக மும்பை ஆர்தர் சாலை சிறை உயர்பாதுகாப்பு வசதிகளுடன் தயாராக உள்ளதாக கூறியுள்ளது.  அவரை நாடுகடத்தத் தேவையான முயற்சிகளில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் லண்டன் நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த நாள் என்றும், இந்தியாவை ஏமாற்றிவிட்டு எவரும் தப்பிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பயனடைந்த குற்றவாளியை, தற்போதைய அரசு வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.