​​ பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக-வினர் மறியல் போராட்டம்

Jan 29, 2018 11:37 AM

பேருந்து கட்டணத்தை முழுமையாக குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மறித்து திமுகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சென்னை கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், பெரவள்ளூர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சியினரும் பங்கேற்றனர். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்பட சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். அவர்கள் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.

கோவை பீளமேடு சந்திப்பில் தி.மு.க கூட்டணி கட்சிகளின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சுமார் 60 பேரை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 75 பேரை கைது செய்த போலீசார், தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் அவர்களை வைத்துள்ளனர்.

தஞ்சையில் பேரணியாக வந்த தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனவரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 300 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்ளிட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளை மறித்து திமுகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று காரியாப்பட்டி பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று கீழ்ப்பெண்ணாத்தூர், போளூர், செய்யாறு ஆரணி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.