​​ யானைகள் புத்துணர்வு முகாம்: மவுத் ஆர்கன் வாசித்தல், நொண்டி அடித்தல் என உற்சாகமாக பொழுதுபோக்கும் யானைகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யானைகள் புத்துணர்வு முகாம்: மவுத் ஆர்கன் வாசித்தல், நொண்டி அடித்தல் என உற்சாகமாக பொழுதுபோக்கும் யானைகள்


யானைகள் புத்துணர்வு முகாம்: மவுத் ஆர்கன் வாசித்தல், நொண்டி அடித்தல் என உற்சாகமாக பொழுதுபோக்கும் யானைகள்

Jan 29, 2018 11:17 AM

தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கிய முகாமில் 33 யானைகள் கலந்து கொண்டன.

ஒரு மாதத்திற்கும் மேலாக முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகள் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகின்றன. தினசரி காலை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் ஆடி அசைந்த படி நடைபயிற்சி மேற்கொள்ளும் யானைகள், அதற்கு பின்னர் ஷவர் பாத்களில் குளிக்க வைக்கப்படுகின்றன.

பசுந்தீவனம், அரிசி, பச்சைப்பயறு கொள்ளு உப்புடன், சிறப்பு ஊட்டத்து உணவுகளை உண்டபின்,ஓய்வு எடுக்கும் யானைகள், அப்போதும் தும்பிக்கையில் மன்ணை தனது உடல் மீது வாரி இறைந்து விளையாடி மகிழ்கின்றன.

முகாமில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் கோவில் யானையான கோதை மற்றும் சங்கரன்கோவில் யானை கோமதி ஆகியவை மற்ற யானைகளை விட சற்று அதிக உற்சாகத்துடன் காணப்படுகின்றன. ஓய்வு நேரத்தில் மவுத் ஆர்கன் வாசித்தபடி உற்சாகமாகக் காணப்படும் யானை கோதையை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த வியப்புடன் கண்டுகளிக்கின்றனர்…

முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகளிலேயே அதிக குறும்புடன் இருப்பதாக சக பாகன்களே கூறும் அளவுக்கு சேட்டைகள் செய்து வருகிறது சங்கரன்கோவில் யானை கோமதி… மவுத் ஆர்கன் வாசிப்பதோடு, ஒரு காலை தும்பிக்கையால் தாங்கிக் கொண்டு, மற்றொரு காலால் நொண்டி அடித்து கோமதி செய்யும் சேட்டைகள் அனைவரையும் கவர்கிறது..

ஒரு வளாகத்திற்குள் அடைபட்டுக் கிடந்த யானைகள், மற்ற யானைகளுடன் சேர்ந்து இருப்பதால் குதூகலத்தில் இருப்பதோடு, தம்மை காண வருவோரையும் மகிழ்ச்சியடைய வைக்கின்றன..