​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”MGR நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க தடை..! கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Published : Nov 19, 2018 4:50 PM



”MGR நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க தடை..! கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை” - சென்னை உயர்நீதிமன்றம்

Nov 19, 2018 4:50 PM

சென்னை கடற்கரைச் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமானப் பணிகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணண், சேஷசாயி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விதிமுறைகளின் படி அனுமதி பெறப்பட்டே நினைவு வளைவு அமைக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சாலையில் ஒரு மீட்டர் தொலைவில் தான் சட்டமன்ற வைரவிழா வளைவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அப்போது போக்குவரத்துக்கு இடையூறு என்று கூறித்தான் காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டதாகவும், அதே சாலையில் தான் இந்த நினைவு வளைவும் அமைக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஏற்கனவே அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி நீண்ட காலமாக போராடி வருவதாகவும் அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள் அந்த இழப்பீடுகளுக்கு தற்போது வட்டியையும் சேர்த்து வழங்கவேண்டிய நிலை உள்ளதாகக் கூறினர். வட்டியாகச் செலுத்த வேண்டிய பணம் வரிசெலுத்தும் மக்களுடைய பணம் என்று தெரிவித்த நீதிபதிகள், இதனை நிதி ஒழுங்கீனமாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அவர்களின் பணத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் தேவைகளுக்கானதாகவும் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க தடை விதித்த நீதிபதிகள், அதே நேரத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை என்று தெரிவித்தனர். எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை அமைப்பது உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.