​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருமபுரி பேருந்து எரிப்புக் குற்றவாளிகள் 3 பேர் வேலூர் சிறையில் இருந்து விடுவிப்பு

Published : Nov 19, 2018 1:52 PM



தருமபுரி பேருந்து எரிப்புக் குற்றவாளிகள் 3 பேர் வேலூர் சிறையில் இருந்து விடுவிப்பு

Nov 19, 2018 1:52 PM

தருமபுரியில் 2000ஆம் ஆண்டு நடந்த பேருந்து எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் மூன்று பேர் நன்னடத்தை அடிப்படையில் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

கொடைக்கானலில் விதிகளை மீறி பிளசண்ட் ஸ்டே உணவு விடுதி கட்டுவதற்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கிய வழக்கில், 2000ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. அப்போது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் தருமபுரிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அவர்களது பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட முனியப்பன், பாபி என்ற ரவிச்சந்திரன், நெடு என்கிற நெடுஞ்செழியன் ஆகியோருக்கு 2006ஆம் ஆண்டு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. உயர்நீதிமன்றத்திலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற முறையீட்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

12 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படும் கைதிகள் பட்டியலில் இவர்களது பெயரும் இருந்தது. முதலில் இந்த 3 பேரின் பெயர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்த நிலையில், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டதால்
மூன்று பேரையும் விடுவிக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறையை விட்டு வெளியே வந்த அவர்களை உறவினர்கள் அவசர அவசரமாக காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.