​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் அபாய மாவட்டங்களில் 24 மணிநேரமும் தயார் நிலையில் மருத்துவர்கள் - விஜயபாஸ்கர்

Published : Nov 15, 2018 9:00 PM

புயல் அபாய மாவட்டங்களில் 24 மணிநேரமும் தயார் நிலையில் மருத்துவர்கள் - விஜயபாஸ்கர்

Nov 15, 2018 9:00 PM

புயல் அபாய மாவட்டங்களில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், கடலோர பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிகிச்சைக்கான அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து சர்க்கரையில் அக்கரை என்ற பெயரில் சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு வகைகளை தயாரிக்கும் விழிப்புணர்வு சமையல் திருவிழா நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட இருபது அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் வரகு, சாமை, கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட தானியங்களால் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன அவற்றை அமைச்சர்கள் சுவைத்துப் பார்த்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணியினருக்கு அமைச்சர்கள் பரிசுகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புயல் அபாயம் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், கடலோர பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.