​​ பாலியல் அத்துமீறல் வழக்கில் சென்னையை சேர்ந்த சாமியாரை பிடிக்க தனிப்படை வாரணாசியில் முகாம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் அத்துமீறல் வழக்கில் சென்னையை சேர்ந்த சாமியாரை பிடிக்க தனிப்படை வாரணாசியில் முகாம்

Published : Nov 09, 2018 11:23 AMபாலியல் அத்துமீறல் வழக்கில் சென்னையை சேர்ந்த சாமியாரை பிடிக்க தனிப்படை வாரணாசியில் முகாம்

Nov 09, 2018 11:23 AM

பாலியல் அத்துமீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் சென்னையை சேர்ந்த சாமியாரை பிடிக்க, மத்தியக் குற்றப்பிரிவின் தனிப்படை வாரணாசியில் முகாமிட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி என்ற சாமியார், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் , 2002ஆம் ஆண்டு முதல் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரை ஆன்மிக குரு என நம்பி, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்பத்துடன் அவரது பக்தராகிவிட்டார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி , சுரேஷின் ஆழ்வார்பேட்டை வீட்டில் உள்ள கீழ்தளத்திற்கு ஆசிரமத்தை மாற்றியுள்ளார்.

மெல்ல மெல்ல சுரேஷின் குடும்பத்தை தனது பிடிக்குள் கொண்டுவந்ததோடு, 15 லட்ச ரூபாய் பணத்தையும் கறந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷின் மனைவிக்கும், அவரது 16 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எதிர்த்துக்கேட்டபோது, ஸ்ரீபதி, ஸ்ரீதர், கல்கி மனோகரன், பாலமுருகன், தாமோதரன், அனந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார். சுரேஷையும், அவரது குடும்பத்தாரையும் அவர்களது வீட்டிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதிலிருந்து தப்பி சுரேஷ் அளித்த புகாரின்பேரில், 2004ஆம் ஆண்டில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதியையும், அவரது கூட்டாளிகள் 6 பேரையும் 2004ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் கைது செய்தனர். வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமீன் பெற்ற சாமியார் சதுர்வேதி, 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

தலைமறைவான அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சாமியார் சதுர்வேதி வாரணாசியிலும், நேபாளத்திலும் இருப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில், அவரை கைது செய்ய மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டு, சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதியை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.