​​ வயிற்றுவலி நாடகம்... ரயில் கொள்ளையர்கள் பலே
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வயிற்றுவலி நாடகம்... ரயில் கொள்ளையர்கள் பலே

Published : Nov 09, 2018 7:25 AMவயிற்றுவலி நாடகம்... ரயில் கொள்ளையர்கள் பலே

Nov 09, 2018 7:25 AM

ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்து அதிர வைத்த வடமாநில கொள்ளையர்கள், சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வயிற்று வலி நாடகமாடி எந்த தகவலையும் தெரிவிக்காமல் அதிகாரிகளை திணறடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில், மேற்கூரையில் துளையிட்டு ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில், அண்மையில் 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 10 நாள்களாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிப் பணம் ரயிலின் அந்தப் பெட்டியில்தான் கொண்டு செல்லப்பட்டுகிறது என்ற தகவல் கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் பிரதான கேள்வியாக உள்ளது.

மேலும், துணிகர கொள்ளை குறித்த பல்வேறு கேள்விகளை முன்வைத்து நடத்தி வரும் விசாரணையில், கொள்ளையர்களிடமிருந்து உண்மையை வெளிக்கொணர முடியாமல் அவர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட கொள்ளையர்கள் மத்தியப்பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்ட பார்தி என்ற குற்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், ரட்லத் பகுதியைச் சேர்ந்த அந்த ஐவருக்கும் இந்தி மொழி தெரியும். எனினும், விசாரணையின்போது அவர்களுக்குள் பார்தி மொழியில் பேசி, திட்டமிட்டு போலீசாரை திசை திருப்புவதாகக் கூறப்படுகிறது.

தினமும் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போதும், ஒன்றாக வைத்து விசாரிக்கும்போதும் அவர்கள் பார்தி மொழியில் பேசி தங்களுக்குள் ஆலோசித்து, உண்மையை உளராமல் தப்பிக்கும் யுக்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது. கொள்ளையர்கள் எச்சரிக்கையாக இருப்பதால் கொள்ளை குறித்த தகவல்களை பெற முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திக்குமுக்காடியுள்ளனர். இவர்களில் பில்தியா என்ற கொள்ளையன் போட்ட நாடகம் சிபிசிஐடி அதிகாரிகளை பெரிதும் அதிர வைத்துள்ளது.

தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு கொள்ளையன் பில்தியாவை தனியே அழைத்து விசாரித்தபோது, அவன் திடீரென வயிற்றை பிடித்துக் கொண்டு அலறித் துடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பில்தியாவை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கொள்ளையன் உடல்நிலை சரியில்லாதது போல் நடிப்பது மருத்துவர்களின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையன் பில்தியாவின் நாடகத்தால், விசாரணை அதிகாரிகள் தீபாவளிப் பண்டிகைக்குக் கூட வீட்டுக்கு செல்ல முடியவில்லை என நொந்து கொண்டதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் பேசப்படுகிறது. விசாரணையில் உண்மையைக் கூறாமல் பார்தி கொள்ளையர்கள் எப்படி தப்புகின்றனர் என பிற மாநில போலீசாரிடம் அவர்கள் ஆலோசனை கேட்டுள்ளனர்.

அதில், பார்தி இனத்தைச் சேர்ந்தவர்கள், கொள்ளை, வழிப்பறி, கொலை செய்துவிட்டு கொள்ளையடிப்பது, ஓடும் ரயில்களில் கொள்ளையடிப்பது போன்றவற்றை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்று சிபிசிஐடி போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில், ஜம்மு -காஷ்மீர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் பார்தி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் போலீசார் கையாளும் விசாரணை முறைகளை அறிந்துள்ள அவர்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டு தப்புவது என பயிற்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களை காவலில் விசாரிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கொள்ளையடித்த பணம்,கூட்டாளிகள் என எந்த தகவலையும் பெறுவது சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது.