​​ சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்டத்துறை அமைச்சருடன், தலைமை வழக்கறிஞர் ஆலோசனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்டத்துறை அமைச்சருடன், தலைமை வழக்கறிஞர் ஆலோசனை


சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்டத்துறை அமைச்சருடன், தலைமை வழக்கறிஞர் ஆலோசனை

Nov 08, 2018 1:00 PM

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

விஜய் நடித்து வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் அரசு இலவச பொருட்கள், ஜெயலலிதாவின் இயற்பெயர் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று உள்ளதாகக் கூறப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் காட்சிகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை, அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், சர்கார் படத்திற்கெதிரான சட்டரீதியான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சர்கார் படத்திற்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதனிடையே சர்க்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேவராஜ் என்பவர் அளித்துள்ள புகாரில் தமிழக அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சர்க்கார் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் மக்களுக்கு வழங்கிய இலவச மிக்சி கிரைண்டர் உள்ளிட்டவற்றை தீயில் போட்டு எரிக்கும்  காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்க்கார் படத்தில் இடம்பெறும் காட்சிகள் இலவசங்களை பெற்ற மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.