​​ சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!


சொன்னது போலவே சர்கார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ்..!

Nov 06, 2018 2:56 PM

சர்கார் திரைப்படத்தை தீபாவளி நாளான இன்றே இணையத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சவால் விடுத்திருந்தது. அதன்படி சொன்னது போலவே சர்கார் படம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்...! தமிழ் தெலுங்கு இந்தி என எந்த மொழியில் புதிய படங்கள் வெளியானாலும் வெளியான அன்றே இணையத்தில் திருட்டு வீடியோவாக வெளியிட்டு விடுவது வழக்கம்..!

அந்தவகையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மினை பிடிபோம் என்று சவால் விட்டு தயாரிப்பாளர் சங்க பதவிக்கு வந்த விஷால் மற்றும் ஞானவேல்ராஜாவால் தங்கள் சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை..!

ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார், தலைவரான விஷால் எப்படியும் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை பிடித்து விடுவோம் என்று பல லட்சம் செலவழித்து ஆபாச இணையதள அட்மின் ஒருவரை போலீசில் பிடித்து கொடுத்தார்.

தற்போது வரை தமிழ் ராக்கர்ஸ் அட்மின் யார் ? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தமிழ் சினிமா ஹீரோக்களிடம் அடிவாங்கும் வில்லன் போல தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்..!

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று அண்மையில் வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதை டிவிட்டரில் அறிவித்தது. அந்த டிவிட்டர் பதிவின் கீழே, திரைக்கு வரும் சர்கார் திரைபடத்தை அன்று மாலை 6:30 மணிக்கே இணையத்தில் வெளியிட போவதாக தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டரில் பதிவிட்டு அதிர வைத்தது.

தகவல் அறிந்து பதறிப்போன தயாரிப்பாளர் சங்கம் நாங்கள் இருக்கிறோம் என்று சர்கார் குழுவிற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு உள்ளே சிசிடிவி காமிராவை பொறுத்தி, சர்கார் படத்தை படம் பிடிக்கும் நபர்களை உடனடியாக பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் சவாலுக்கு எதிர்சவால் விட்டுள்ளார் சங்கத்தின் கவுரவ செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ்.

தமிழக திரையரங்குகளை சிசிடிவி வைக்க கட்டளையிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழகம் தவிர்த்து சர்கார் வெளியாகும் மற்ற மாநில திரையரங்குகளை எப்படி கண்காணிக்க போகிறது ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சொன்னது போலவே திரையரங்கில் கேமரா வைத்து எடுத்த சர்கார் படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. சொன்னது போலவே சர்கார் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை குறைக்காதவரை தமிழ்ராக்கர்ஸ் போன்ற புதிய படங்களின் திருட்டு வீடியோக்களை வெளியிடும் இணையதளங்களை நாடிச்செல்வோரை தடுக்க இயலாது என்பதே கசப்பான உண்மை..!