​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரன்வீர் ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

Published : Nov 04, 2018 1:11 PM



ரன்வீர் ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

Nov 04, 2018 1:11 PM

சென்னை கிண்டியில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், சாமி ஊர்வல வாகனங்கள் உள்பட 6 கலைப்பொருட்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கற்சிலைகள், தூண்கள் மற்றும் ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, திருவாரூரில் உள்ள ரன்வீர் ஷாவின் சொகுசு பங்களா, திருவையாறில் உள்ள சரபோஜி மன்னர் கால அரண்மனை ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் முகுல்வாடி மற்றும் படப்பையில் உள்ள பண்ணைகளிலும் சோதனை நடைபெற்றதில், மொத்தம் 224 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, ரன்வீர் ஷாவின் தொழில் கூட்டாளியும், பெண் தொழிலதிபருமான கிரண் ராவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சிலைகளை பறிமுதல் செய்ததோடு, ரன்வீர் ஷா, கிரண் ராவ் உள்பட 14 பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், ரன்வீர் ஷா, கிரண் ராவ் ஆகியோர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கூறியுள்ள போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயச் சாலையில் உள்ள ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான பி.எஸ். அப்பேரல்ஸ் எனப்படும் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், இன்று காலையில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம், கூடுதல் டி.எஸ்.பி. அசோக் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 காளை, சிம்மம், கருடன் மற்றும் யானை வாகனங்கள் மற்றும் கோவில் பள்ளியறையில் பயன்படுத்தப்படும் தொட்டில் ஆகிய 6 கலைபொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்த டி.எஸ்.பி. சுந்தரம், கூடுதல் டி.எஸ்.பி. அசோக் நடராஜன் ஆகியோர், கைப்பற்றப்பட்ட 6 கலைப்பொருட்களும் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறினர்.

தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோரிடம் இருந்து கைப்பற்ற சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை வைக்க, அருங்காட்சியகத்தில் இடம் இல்லாததால், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திலேயே வைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தற்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள், ரன்வீர் ஷாவின் ஏற்றுமதி நிறுவனத்திலேயே பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.