​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு

Published : Nov 01, 2018 6:22 PM



ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முடிவு

Nov 01, 2018 6:22 PM

நாட்டை காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி வருவதாக, ராகுல் காந்தியுடனான சந்திப்பிற்கு பின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். 

நாட்டில், பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராகுலின் முயற்சிக்கு கைகொடுக்கும்  வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை எனக்கூறி, கடந்த மார்ச் மாதம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து, விலகிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அண்மையில் டெல்லி வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், குமாரசாமி, மாயாவதி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சூழலில், ஒரு வார காலத்திற்குள்ளாக இரண்டாவது முறையாக டெல்லி வந்த சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு தேச எம்பிக்கள் ஜெயதேவ், ரமேஷ் ஆகியோரோடு சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வியாழக்கிழமை சந்தித்தார். ஆலோசனைக்கு பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை மத்திய அரசு சீரழிப்பதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, இதுபற்றி ராகுலுடன் விவாதித்ததாக தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பாற்ற, காங்கிரசுடனான கடந்தகால வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுடியது காலத்தின் கட்டாயம் என்றார். அப்போது, இந்த புதிய முயற்சிக்கும், புதிய கூட்டணிக்கும், தலைமை தாங்க போவது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என ஒற்றை கோரிக்கையோடு, அனைத்து எதிர்க்கட்சிகளும் விரைவில் ஒன்றுகூடி, முதலில் கொள்கையை வரையறுப்போம் என்றார். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை, பொதுவான தளத்தில், ஒன்றுதிரட்டுவதே தனது குறிக்கோள் என அவர் கூறினார்.