​​ தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Published : Oct 26, 2018 10:05 PM

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Oct 26, 2018 10:05 PM

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, மாநகரின், 6 வெவ்வேறு இடங்களில் இருந்து, வருகிற 3ஆம் தேதி முதல், 5ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும், மாதவரம் பணிமனை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. திண்டிவனம் வழியாக, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையம் அருகிலிருந்து இயக்கப்படும். ECR என சுருங்க அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்க்கெட் "E" சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, "B" சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து, நசரத்பேட்டை வெளிவட்ட சாலை வழியாக, ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து, வெளியூர்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில், வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்படும். தீபாவளி பண்டிகை போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வருகிற 3, 4, 5 மற்றும் 7ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களில், பகல் 2 மணி முதல், நள்ளிரவு 2 மணி வரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து, சென்னைக்குள் வர கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில், பொதுவாகவே, தாம்பரம் - பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பானது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும், தனியார் வாகனங்கள், ECR அல்லது OMR சாலை வழியாக, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையை அடையுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.