​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டாசு வெடிப்பதற்கு புதிய விதிமுறைகள், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கும் என உற்பத்திளார்கள் வருத்தம்

Published : Oct 25, 2018 6:39 PM

பட்டாசு வெடிப்பதற்கு புதிய விதிமுறைகள், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கும் என உற்பத்திளார்கள் வருத்தம்

Oct 25, 2018 6:39 PM

தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் உட்பட உச்சநீதிமன்றம் புதிய விதிமுறைகள் விதித்துள்ளதால், பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவரம்..

இந்திய நாட்டில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், அவற்றில் தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு உண்டு. சாதி , மத, கலாச்சார வேறுபாடின்றி சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்து மகிழ்பவர்கள் தான் ஏராளம்.

ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசுபடுதல் போன்ற காரணங்களால் நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதில் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். குறிப்பாக , தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்ற உத்தரவு பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியன்று அதிகாலையிலேயே எழுந்து வழிபாடுகளை முடித்து பட்டாசு வெடிக்கும் பழக்கவழக்கங்கள் மக்களிடையே உள்ள நிலையில் இரவில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பினால் பட்டாசு விற்பனை சரிவை சந்திக்கும் எனவும், நாடு முழுவதும் உள்ள பட்டாசு தேவையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இத்தீர்ப்பினால் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என 8 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க கூடிய சூழல் உருவாகியுள்ளதாவும் கூறுகிறார் , சிவகாசியை சேர்ந்த பட்டாசு உற்பத்தியாளர் கண்ணன்.

ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் மொத்தமாக பட்டாசு வாங்குவதற்கு ஏதுவாக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம், போரியம் சால்ட் போன்ற மூலப்பொருட்களை கொண்டு தயாரித்த பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் முன்னதாகவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வாங்கப்பட்டுள்ள பட்டாசுகள் தேங்கிவிடும் எனவும் இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் சென்னையை சேர்ந்த விற்பனையாளர் அனிஷ்ராஜா.

அதே நேரத்தில் , ஆனலைன் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையால் அதிக மாசு ஏற்படுத்தும் சீன பட்டாசுகள் பரவாமல் தடுக்கப்படும் எனவும் வரவேற்கிறார்.

தற்போது வழங்கியுள்ள இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ,8 லட்சம் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தையும் , பொதுமக்களது உணர்வுகளை கருத்தில் கொண்டு நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.