​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

Published : Oct 21, 2018 1:44 PM

அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

Oct 21, 2018 1:44 PM

பஞ்சாபில் 61 பேர் உயிரிழப்பிற்கு காரணமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயில் வரும்  தண்டவாளம் என்று கூட பொருட்படுத்தாமல் சித்துவின் மனைவியைக் காண ஆட்கள் நிற்பதாக மேடையில் இருந்த ஒருவர் பாராட்டி பேசும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் ரயில் விபத்துக்கு முன், ராவண வத நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அம்மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்த நிலையில், உரிய நேரத்தில் வந்திருந்தால் கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என விமர்சிக்கப்பட்டது. பார்வையாளர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து வீட்டுக்குச் சென்ற பின்தான் தமக்குத் தெரியும் என்றும், தாம் ஒரு மருத்துவர் என்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், மேடையில் மாலையணிந்தபடி சித்துவின் மனைவி இருக்க அவருக்கு அருகில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஆளும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் மதன் மித்து பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், சித்துவின் மனைவியைக் காண தண்டவாளம் என்றும் கூட பார்க்காமல் 5 ஆயிரம் பேர் அங்கு நின்றிருப்பதாகவும், 500 ரயில்கள் கடந்து சென்றாலும் தங்களைப் பார்க்காமல் செல்ல மாட்டார்கள் என காத்திருப்பதாகவும் புகழ்ந்து பேசினார். 

இந்த விபத்து அஜாக்கிரதையால் நடந்தது என்றும், அப்போதே ஒருங்கிணைப்பாளர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
12 ஆண்டுகளில் 39 லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்த வழக்கில் யாருடைய பெயரும் இடம் பெறாத நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.

பஞ்சாபில் ராம் லீலாவில் ராவண வேடமிட்ட நபர், உயிரிழப்பதற்கு முன் 8 பேரைக் காப்பாற்றியதாக அவரது நண்பர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஆண்டுதோறும் ராவண வேடமிடுவதால், லங்கேஷ் என அழைத்து தாங்கள் தல்பிர் சிங்கை கேலி செய்து வந்ததாகவும், கரகரத்த குரலில் அவரது கர்ஜனை போன்ற வசனங்கள், ராவணன் என்ற கதாப்பாத்திரத்தையும் மறந்து கைதட்ட வைக்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு ஏற்படுத்தித் தற்திருந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று தண்டவாளம் அருகே நின்று ராவணவதம் பார்த்தபோது, கூட்டத்தை நோக்கி ரயில் வருவதை தல்பீர் சிங் கவனித்துவிட்டதாகவும், அங்கிருந்த 7 முதல் 8 பேரை அவர் தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு உயிர்களைக் காப்பாற்றியபோதும் தல்பீர் சிங் தப்பும் முன் ரயில் மோதி இறந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த தல்பீர் சிங்குக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலை கோரி உடலைப் பெற மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார். 

இதனிடையே முந்தைய ரயில் விபத்துக்களோடு ஒப்பிடும் போது, நாட்டிலேயே ரயில்வே வரலாற்றில் தண்டவாளக் கடவுப் பாதையில் அத்துமீறி நுழைந்து ஏற்பட்ட விபத்தில் அதிக உயிர்கள் பலியானது இந்த விபத்து தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரியும், ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பலர் உடல்களைப் பெற மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜோடா-பதக் ரயில் தண்டவாளத்தில் மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை அப்புறப்படுத் காவல்துறையும், அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத அவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசித் தாக்கினர். இதில், காவலர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். 

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைத்தாலும், அவர்களின் உடமைகள், ஆபரணங்கள், செல்போன்கள், பர்சுகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலிலும் கொள்ளை நடந்தது அவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.