​​ ஜெயலலிதாவை தாய் என்று உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதாவை தாய் என்று உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

ஜெயலலிதாவை தாய் என்று உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Oct 12, 2018 1:53 PM

ஜெயலலிதாவை தாய் என்று உரிமை கோரிய அம்ருதா, ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் தனது தாய் என உரிமை கோரி முதலில் உச்சநீதிமன்றத்தை நாடிய பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, பின் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்து வந்த நீதிபதி வைத்தியநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று தீர்ப்பு வழங்கினார்.

தாம் ஜெயலலிதாவின் வாரிசுதான் என்பதற்கு அம்ருதா தரப்பில், எந்தவிதமான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கூறியுள்ளார். தன்னுடைய வயது சான்று என அம்ருதா தாக்கல் செய்துள்ளதில், குறிப்பிட்ட அதே நேரத்தில், ஜெயலலிதா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த வீடியோ ஆதாரங்கள், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். ஜெயலலிதாவின் உடன் பிறந்த சகோதரி எனக் கூறும் சைலஜா என்பவரிடம் பாதுகாப்பு கருதி தம்மை வளர்ப்பதற்காக கொடுத்ததாக அம்ருதா கூறியுள்ளார்.

ஆனால், ஜெயலலிதாவின் தாயாருக்குப் பிறந்தவர்கள் இருவர் மட்டுமே எனவும், அது ஜெயராமனும், ஜெயலலிதாவும் மட்டுமே என்பதும் சட்டப்படி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஜெயலலிதாவின் மகள்தான் என்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு, உறுதியான ஆதாரங்கள் எதுவும் அம்ருதா தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும், அவ்வாறு தாக்கல் செய்திருந்தால்தான் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்டிருக்க முடியும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கானது மர்மம் நிறைந்த திரைப்படங்களில் வரும் திருவிளையாடலை ஞாபகப்படுத்துவது போல் உள்ளதாகவும் நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் தீபா, தீபக் ஆகியோர் மட்டுமே எனவும், ஆனால், தீபக் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டாலும், தமிழக அரசு தான் இறுதிச்சடங்கை முன்னெடுத்து நடத்தியுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.எனவே, முழுக்க முழுக்க விளம்பரத்துக்காகத் தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.