​​ தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன - ஆளுநர் மாளிகை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன - ஆளுநர் மாளிகை

தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் செய்திகள் வெளியிடப்படுகின்றன - ஆளுநர் மாளிகை

Oct 12, 2018 12:24 PM

பன்வாரிலால் புரோஹித்துக்கும் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் பேராசிரியை நிர்மலா தேவி ஒரு போதும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில், ஆளுநர் மாளிகை விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனோ ஆளுநர் மாளிகையுடனோ அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை தொடர்புடுத்துவது முற்றிலும் தவறானது என்றும், அதில் துளி கூட உண்மையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முதல் குடிமகனாகிய ஆளுநரை, அவதூறாகவும், அசிங்கமாகவும், கோழைத்தனமான முறையிலும் தாக்குதவதை நிறுத்துவதற்காக, மிகுந்த பொறுமைகாத்த பிறகு, சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையை பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என கூறுவது நகைப்பிற்கிடமானது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதற்கும் ஒரு எல்லை உண்டு என்கிற நிலையில், மிகவும் கண்ணியமாக 6 மாதம் பொறுமைகாத்த பிறகு, சட்டம் அதன் பணியைச் செய்தது என்றும், நீதிமன்றத்தின் விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்றும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. கடந்த செப்டம்பரில் நக்கீரன் பத்திரிக்கையில் மஞ்சள் இதழியல் தன்மையில் வெளியான கட்டுரை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. புலனாய்வு இதழியலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், போலீசாரிடம் நிர்மலா தேவி உண்மையிலேயே கூறியது என்ன என்பதை சரிபார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட அக்கறைப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது, இதழியலில் அலட்சியம் மற்றும் கோழைத்தனத்தின் உச்சம் எனவும் சாடப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை என்றும், ஆளுநருடனோ அவரது செயலருடனோ அல்லது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளுடனோ நிர்மலா தேவிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்காக அழைக்கப்பட்டபோது, ஆளுநர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்திற்கு ஒருபோதும் செல்லவில்லை என்றும், விருந்தினர் இல்லத்தில் தங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநருடன் ஒருபோதும் அவரது செயலர் சென்றதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மைக்கும், நன்மைக்கும் எதிராக ஆழமான வெறுப்பு கொண்டவர்களால் மட்டுமே, நக்கீரன் இதழில் வெளியானது போன்ற கட்டுரைகளை எழுத முடியும் என்றும், இத்தகைய தவறான, மஞ்சள் இதழியலுக்கு மதிப்பிற்குரிய நபர்களும் ஆதரவளிப்பது வருத்தத்திற்கு உரியது என்றும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. அரசின் அதிகாரத்தை மிதமிஞ்சிப் பயன்படுத்துவதற்கு நெருக்கமான செயலைக்கூட ஆளுநர் மாளிகை செய்ததோ ஆதரித்ததோ இல்லை என்றும், தொடர்ச்சியாக காயப்படுத்தும் வகையில் அடிப்படையற்ற அவதூறுகளை செய்ததால் சட்ட அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. அரசமைப்புச்சட்ட அதிகாரம் பெற்ற ஆளுநரை நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பதவியின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களுக்கு ஆளுநர் மாளிகை ஒருபோதும் அடிபணியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகள் எந்த எல்லையை நோக்கியும் சமூகத்தை கொண்டு செல்லக்கூடும் என்ற அச்சத்தினாலேயே ஆளுநர் மாளிகை உண்மையை விளக்க வேண்டியதாயிற்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.