​​ சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட விவகாரம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட விவகாரம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

Published : Oct 11, 2018 5:15 PM

சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட விவகாரம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

Oct 11, 2018 5:15 PM

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைகடத்தல் வழக்கில் கைதான கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்தது தொடர்பாக மனுதாரர் தரப்பில் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், இந்த அரசாணை பிறப்பிக்க 3 மாதங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாக கிடைக்க பெறவில்லை என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், எந்த ஆவணங்களையும் மத்திய அரசிற்கு அனுப்பாமல் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசுக்கு அவசியமென்றால் 1 மணி நேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், இல்லையென்றால் உத்தரவு பிறப்பிக்க 3 மாதங்கள் ஆவதாகவும் நீதிபதிகள் சாடினர்.

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை இன்றே மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 25ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.