​​ மூளை பாதிப்புக்கு ஆளான சிறுவனை கருணை கொலை செய்ய கோரிய வழக்கு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூளை பாதிப்புக்கு ஆளான சிறுவனை கருணை கொலை செய்ய கோரிய வழக்கு

மூளை பாதிப்புக்கு ஆளான சிறுவனை கருணை கொலை செய்ய கோரிய வழக்கு

Oct 11, 2018 4:28 PM

மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை சித்த மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. 

கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கும் உள்ளாகியுள்ள தனது 10 வயது மகனை, கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த அமோல் ((AMOL)) என்ற மறுவாழ்வு அமைப்பு டிரிகர் பாயிண்ட் தெரபி ((Trigger Point Therapy)) என்ற வெளிப்புற பிசியோதெரபி சிகிச்சை மூலம் சில மாதங்களில் குணப்படுத்த முடியும் என்றும் இணைப்பு மனு தாக்கல் செய்தது. அப்போது, ஆரணியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆனந்த் ஸ்ரீராம் என்பவர் சிறுவனை, உட்புற மற்றும் வெளிப்புற சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அப்போது நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் சிறுவனின் சிகிச்சைக்காக ஜான் என்பவர் கொடுத்த, ஒரு லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார். மற்றொரு வழக்கறிஞர் பிரதர் பவுண்டேஷன் மூலம் அந்த சிறுவனின் மருத்துவ உதவிக்கு தேவையான மாதாந்திர தொகை முழுவதையும் அவர்களது கணக்கில் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் சிறுவன் சிகிச்சை பெறுவதற்கும், அவரது பெற்றோர் தங்கி கவனிப்பதற்கும் ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் ருக்மணி வேணுகோபால் உள்ளிட்ட மூன்று பேர் தெரிவித்தனர். மகனை குணப்படுத்த பத்தாண்டுகளாக வழிதேடி கொண்டிருந்த நிலையில், தனது மகனுக்கு மருத்துவ உதவியும், நிதி உதவியும் கிடைத்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாக சிறுவனின் தந்தை திருமேனி கூறினார். இவை அனைத்தையும், பதிவு செய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் இதுபோன்ற கருணை உள்ளங்கள் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்வதாக தெரிவித்தனர். அதேசமயம், சிறுவனுக்கு உதவக்கூடிய திட்டங்கள் ஏதும் உள்ளதா என மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்க அவகாசம் கேட்டதால் அக்டோபர் 23 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.